நூலகங்களுக்கு பத்திரிகை வாங்கும் அளவை அதிகரிக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் இயங்கும் நூலகங்களுக்கு தேவையான பத்திரிகைகளை வாங்கும் அளவை 6.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி முதல்வர்  ஆணையிட வேண்டும் என்று பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட நூலகங்கள் உள்பட சுமார் 6 ஆயிரம் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தற்போது அதிக அளவில் பொதுமக்கள் சென்று நூல்கள், நாளேடுகளை படித்து பயன்பெற்று வருகின்றனர். பெரும்பாலான நூலகங்களில் போதிய அளவில் நாளேடுகள், வார இதழ்கள் இல்லை என்ற குறை நீடித்து வருகிறது. இதனால் புத்தக வாசிப்பும், நாளேடுகளின் வாசிப்பும் குறைந்து வருகிறது.

இந்நிலையில், அதிக அளவில் நாளேடுகள், வார இதழ்களை நூலக நிர்வாகத்தினர் வாங்குவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகை வெளியிட்டாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு பத்திரிகை வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு, சங்கத்தின் தலைவர் சக்திவேல் அளித்துள்ள கோரிக்கை மனு:  தமிழகத்தில் இயங்கிவரும் நூலகங்களில் நாளிதழ்கள், வார இதழ்கள் போன்ற பத்திரிகைகள் குறைவாக வாங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் 6.5 சதவீதத்துக்கு தான் பத்திரிகைகள் வாங்க வேண்டும் என்று ஆணை இருப்பதாக நூலகர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த அளவை மீறிவாங்க கூடாது என்றும் தெரிவிக்கின்றனர். இது, காலம் காலமாக பத்திரிகைகள் வாங்கி வந்த வழக்கத்தை மாற்றுவதுபோல் தோன்றுகிறது. தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் விதிமுறைகள் அனைத்தும் பழைய விதிகள். அதாவது 6.5 சதவீதம் பத்திரிகைகள் வாங்க வேண்டும் என்ற விதி 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட விதி (அரசாணை (நிலை)எண் 1138, கல்வித்துறை, நாள்:23.6.1980). இந்த அரசாணை போடப்பட்ட போது பத்திரிகைகள் எண்ணிக்கை குறைவாக இருந்தன, விலையும் குறைவாக இருந்தன. அதனால் 6.5 சதவீதம் என்று வைக்கப்பட்டது.

ஆனால், தற்போது நிறைய பத்திரிகைகள் வந்துவிட்டன. எனவே 40 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ஆணையை தற்போது பொருத்திப் பார்ப்பது எந்த வகையிலும் சரியாக இருக்காது. அரசு  ஆணைப்படி ஒதுக்கப்படும் நிதியில் இருந்து குறிப்பிட்ட சில பத்திரிகைகள் தான் வாங்க முடியும். அதுமட்டுமல்லாமல், நூலகங்களுக்கு தின, வார, மாத இதழ்கள் ஆகியவற்றை படிக்கத்தான் ஆயிரக்கணக்கில் மக்கள் வருகின்றனர். பத்திரிகைகளை நூலகத்துக்கு வாங்கவில்லை என்றால், வாசிக்க வருவோர் எண்ணிக்கை குறைந்துவிடும். அதனால் நூலகங்கள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்படும். நூலகத்துக்கு வர வேண்டிய செஸ் என்ற நூலக வரி முறையாக வழங்கப்படாமல் இருப்பதுதான். நூலக வரி வெறும் 10 பைசா என்று இருப்பதாலும், நாளுக்கு நாள் நூலகத்துறை பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

நூலகங்களில் நூல்கள், பத்திரிகைகள் மக்கள் வாசிப்பதின் மூலம் சீர்திருத்தம் கொண்டு வர முடியும். எனவே ஒவ்வொரு மாவட்ட நூலகத்துக்கும் பொது நூலகத்துறை நிதியில் இருந்து நேரடியாக எவ்வளவு தொகை தேவையோ அதை உடனடியாக வழங்க முதல்வர் ஆவன செய்ய வேண்டும். அந்த பொது நிதியை பட்ஜெட்டில் அறிவித்து ஒதுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை நூலகத்தொகை வழங்கும் முறையை மாற்றி 3 மாதத்துக்கு ஒரு முறை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், கடந்த ஆண்டே பத்திரிகைகள் வாங்க 6.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம் சார்பில் முதல்வருக்கும், பள்ளிக் கல்வி துறை அமைச்சருக்கும் கடிதம் அளித்தோம். எனவே முதல்வர் உடனடியாக இதுகுறித்து பரிசீலித்து 20 சதவீதம் அளவுக்கு பத்திரிகை வாங்க ஆணையிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: