அமெரிக்கா, ஓமன், கத்தாரில் தவித்த 498 பேர் சென்னை திரும்பினர்: 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

சென்னை: அமெரிக்கா, ஓமன், கத்தாரில் தவித்த 498 பேர் சென்னை திரும்பினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு 140 பேருடன் சென்னை வந்தது. அதில் 57 ஆண்கள், 73 பெண்கள், 10 சிறுவர்கள் வந்தனர். அவர்களை அதிகாரிகள் வரவேற்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் தனிமைப்படுத்த இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு 4 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கு 136 பேரும் அனுப்பப்பட்டனர்.

ஓமன் நாட்டின் மஸ்கட்டில் இருந்து 205 பேருடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சென்னை வந்தது. அதில் 181 ஆண்கள், 20 பெண்கள், 4 சிறுவர்கள் வந்தனர். அவர்களை அதிகாரிகள் வரவேற்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் தனிமைப்படுத்த இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு 153 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கு 52 பேரும் அனுப்பப்பட்டனர். இதுபோல, கத்தார் நாட்டின் தோகாவில் இருந்து 153 பேருடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தது.

அதில் 144 ஆண்கள், 9 பெண்கள் இருந்தனர். இவர்கள் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். அந்நிறுவனமே சிறப்பு அனுமதி பெற்று தனி விமானத்தில் அழைத்து வந்தது. இவர்கள் தனிமைப்படுத்த சென்னை நகர ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தனியார் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்வார்கள்.

Related Stories: