10 நாட்களாக தொடர் மின்வெட்டு மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: செய்யூர் அருகே பரபரப்பு

செய்யூர்: செய்யூர் அருகே கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் துணை மின் நிலைய அலுவலகத்தை திடீர் என முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை ஒட்டி, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மின் வினியோகமானது கடுகப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், 10 நாட்களுக்கு முன் இந்த துணை மின் நிலையத்தில் புதிய மின் சாதனங்கள் மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால், கடந்த 10 நாட்களாக  பவுஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாள்தோறும் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு வந்ததுள்ளது.

எந்தவித முன்னறிவிப்புமின்றி மின் இணைப்பு துண்டிப்பதால், பவுஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகள், அரசு அலுவலக பணியாளர்கள்,  தொழில் நிறுவனங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் மின்வாரிய துறையினர் புகாரின் மீது துரித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அதிகாரிகள் மீது அதிருப்தியில் இருந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணி அளவில் கடுகப்பட்டு துணை மின் நிலைய அலுவலகத்தை  முற்றுகையிட்டு அங்குள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்ததோடு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை விரைந்து முடித்து மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.  இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: