தமிழர்களின் ஆதரவை பெற முடியாத கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதிக்கிறது : திமுக எம்.பி. கனிமொழி

சென்னை : தமிழர்களின் ஆதரவை பெற முடியாத கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதிக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி சாடியுள்ளார். கோவை சுந்தராபுரம் பகுதியில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 17) அதிகாலை அந்த சிலை மீது காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

சிலையில் இருந்த காவி நிறச் சாயம் அழிக்கப்பட்டு, சிலை தூய்மைப்படுத்தப்பட்டது.சிலை மீது காவிச் சாயம் பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு,  தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

Related Stories: