கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால், அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் : அசாம் அரசு அறிவிப்பு!!!

கவுகாத்தி : கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால், அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றை குணப்படுத்த இதுவரை தனியாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக, கொரோனா நோயாளிகளுக்கு கூட்டு மருந்து சிகிச்சையே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைக்கு நல்ல பலன் இருந்தாலும், இதைவிட பிளாஸ்மா சிகிச்சை சிறந்த பலனை தந்து வருவது மருத்துவரீதியாக நிரூபணமாகி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சைக்குப் பின் குணமடைவோருக்கு அவர்களின் உடம்பில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் எனவும், ரத்தத்தின் பகுதிப் பொருள்களில் ஒன்றான பிளாஸ்மாவில் இந்த எதிர்ப்பு சக்தி இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மாவை, நோய்த்தொற்று ஆளான மற்றொருவருக்கு செலுத்தி அவரையும் குணப்படுத்தும் சிகிச்சை முறை பிளாஸ்மா தெரபி எனப்படுகிறது.கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், பிளாஸ்மாதெரபி சிகிச்சையை மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. இந்த நிலையில்,  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தங்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்வோருக்கு அரசு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித்து இருந்தது.

அரசு பணிகளில் முன்னுரிமை

அந்த வரிசையில்,கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால், அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டி அளித்த அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கொரோனாவிலிருந்து மீண்டவர் அளிக்கும் 400 கிராம் பிளாஸ்மா மூலம் இருவருக்கு சிகிச்சை அளிக்க முடியும். பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு அதற்கான சான்றிதழும், சுகாதாரத்துறை சார்பில் கடிதமும் வழங்கப்படும்.

குறிப்பிட்ட நபர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பத்தால், இந்த சான்றிதழுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு எதிர்காலத்தில் நேர்காணல்கள், அரசாங்க திட்டங்கள் போன்றவற்றில் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை நாங்கள் கருத்தில் கொள்வோம். ஒரு நேர்காணலில் இரண்டு நபர்களுக்கு சம மதிப்பெண்கள் கிடைத்தன என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் பிளாஸ்மா நன்கொடையாளராக இருந்தால், இரண்டு கூடுதல் மதிப்பெண்கள் அவரது எண்ணிக்கையில் சேர்க்கப்படும். ” என்றார்.

Related Stories: