ஊரடங்கால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 20 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: தமிழக அரசு உதவ வேண்டி கிராம மக்கள் கோரிக்கை!!!

விழுப்புரம்:  விழுப்புரத்தில் மலைக்கற்களை செதுக்கி வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவிற்கு உட்பட்ட தாளுங்குளம் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு வசித்து வரும் மக்கள் மலைக்கற்களை செதுக்கி அம்மிக்கல், உரல் போன்ற வீட்டு உபயோக பொருட்களை செய்வதே தொழிலாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், உருவாக்கப்பட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்ய வெளியில் செல்ல முடியாததால், வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் தினந்தோறும் உணவிற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மலையை ஒட்டியுள்ள இடங்களில் கிடைக்கும் கற்களை சேகரித்து, உளிகொண்டு செதுக்குவதை விடாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். நவீன உலகத்தில் மாவு அரைப்பது போன்றவற்றிற்கு இயந்திரங்கள் பல இருந்தாலும், பழமையான பொருட்களுக்கு என்றும் மதிப்பு குறையவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணத்தால் உருவாக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் நிலவுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால்,  ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: