ராஜஸ்தானில் காங். அரசை காப்பாற்ற பா.ஜ.க. உதவியா?: முன்னாள் முதல்வர் வசுந்தரா மீது பா.ஜ.க. கூட்டணி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு!

ஜெய்ப்பூர்: முதலமைச்சர் அசோக் கெலாட் பதவியை காப்பாற்ற முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மறைமுகமாக உதவி செய்கிறார் என்று பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியே குற்றம்சாட்டியதால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடும் என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சச்சின் பைலட்டுக்கு 18 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இதனை அடுத்து துணை முதல்வர் உட்பட சச்சின் பைலட் வகித்த பதவிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சி எம்.பி. ஹனுமான் பெனிவால்  ட்விட்டரில் முக்கிய பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தமக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அழைத்து சச்சின் பைலட்டை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளதாக ஹனுமான் பெனிவால் கூறியுள்ளார். இதனால் வசுந்தரா ராஜேவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீஸ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதற்கான திட்டம் குறித்து தமது ஆதரவாளர்களுடன் சச்சின் பைலட் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.

Related Stories: