இலவச மின்சாரம் ரத்தானால் திருவண்ணாமலை மாவட்டம் பாலைவனமாகும் 1.82 லட்சம் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம்

திருவண்ணாமலை: தமிழகத்தில், டெல்டா மாவட்டங்களுக்கு இணையாக முழுமையாக நம்பி திருவண்ணாமலை மாவட்டத்தில்  75 சதவீதம் பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்த மாவட்டத்தில், ஆரணி பகுதியில் கைத்தறி நெசவு, செய்யாறு பகுதியில் சிப்காட் ஆகியவை தவிர வேறு பிரதான தொழில் இல்லை. தமிழகத்தில் அதிகபடியாக 860 கிராம ஊராட்சிகளை கொண்ட பெரிய மாவட்டமும் இதுவே. நகர்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகள் குறைவு. திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையும் கைவிட்டு பல ஆண்டுகளாகிறது. எனவே நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக சரிந்துவிட்டது.

மாவட்டத்தில், சாத்தனூர் அணை, கும்பனத்தம் அணை, மிருகண்டா அணை, பயன்படாத செண்பகத்ேதாப்பு அணைகள் இருந்தாலும், அவற்றால் பாசனம் பெறும் நிலப்பரப்பு மிகக்குறைவு. திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,920 ஏரிகள் உள்ளன. ஆனாலும், , கிணற்று பாசனத்தை மட்டுமே விவசாயிகள் நம்பியுள்ளனர்.  தமிழகத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக விவசாய பாசன கிணறுகள் உள்ளது, அதில் 1.82 லட்சம் பம்புசெட் மின் இணைப்புகள் உள்ளன. கிணறுகளில் உள்ள குறைந்தபட்ச நீர் இருப்பை பயன்படுத்தி, பயிர் செய்ய உறுதுணையாக இருப்பது இலவச மின்சாரம் பயன்படுத்தி கிடைக்கும் பம்புசெட் வசதிதான். கிணற்று பாசனத்தை நம்பி நெல், மணிலா, கரும்பு போன்றவை சாகுபடியாகிறது.

3 போகம் சாகுபடி செய்ய முடியாவிட்டாலும், அதிகபட்சம் 2 போகம், கிணற்று பாசனதத்தை நம்பி சாகுபடி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. வறட்சி காலங்களிலும், கிணற்று பாசனமே விவசாயத்தை காப்பாற்றுகிறது. இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவரும் மின்சார திருத்த சட்டத்தின் மூலம், தமிழகத்தில் விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் பறிபோகும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மாநில அரசு விவசாயிகளுக்கு உதவ விரும்பினாலும், மின்சார மானியத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தலாம், நேரடியாக இலவச மின்சாரம் வழங்க முடியாது என்று இச்சட்டத்தின் வரைவு அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், இந்த புதிய சட்டத்துக்கு ஆதரவு கேட்டு சமீபத்தில் மத்திய மின்துறை அமைச்சர், தமிழக முதல்வரை நேரில் சந்தித்திருப்பது மேலும் கவலையை அதிகரித்திருக்கிறது. இந்த புதிய சட்டத்தினால், இலவச மின்சாரம் பறிபோனால், நேரடியாக அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமே முதன்மையான இடத்தில் இருக்கும். விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு லாபம் இல்லாவிட்டாலும், இழப்பை சமாளிக்கவும், தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபடவும் இதுவரை கைகொடுத்து வருகிறது பம்பு செட்் இணைப்புகளுக்கான இலவச மின்சாரம். இந்த வாய்ப்பு மட்டும் இல்லாதிருந்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் காணாமல் போயிருக்கும்.

மேலும், பூந்ேதாட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதில்லை. மின் இணைப்பு பெறுவதே திண்டாட்டமாக இருக்கும் நிலையில், இலவச மின்சார திட்டத்தையே ஒட்டுமொத்தமாக ஒழித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்து, வஞ்சிக்கிறதா? அரசு என்று விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் திமுக ஆட்சி காலத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியது. பின்னர் பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியது. மாநில அரசின் அதிகாரத்தில் இருந்த உரிமையை, புதிய சட்டத்தின் மூலம் மத்திய அரசு தட்டிப்பறிப்பது இனி வரும் காலங்களில் விவசாயத்தை காணாமல் போகச் செய்யும்.

இலவச மின்சாரம் ரத்து செய்யும் நிலை உருவானால், திருவண்ணாமலை மாவட்டத்தின் சாகுபடி பரப்பு முற்றிலுமாக குறையும். மின்கட்டணம் செலுத்தி விவசாயம் செய்யும் நிலையில் விவசாயிகள் இல்லை. விவசாயமும் அந்த அளவுக்கு லாபகரமான தொழிலாகவும் மாறவில்லை. விளை பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமையைகூட இதுவரை பெறாத விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் சலுகையில்லை. அவர்களுக்கு அரசு வழங்கும் உரிமை. அதை பறிக்க நினைப்பது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஏற்படப்போகும் பேராபத்தாகும். திருவண்ணாமலை மாவட்டமே பாலைவனமாகும் நிலைக்கு தள்ளப்படும் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

15 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், பம்புசெட் இலவச மின் இணைப்புக்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்னமும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்து காத்திருக்கின்றனர். மேலும், தட்கல் திட்டத்தில் கட்டணம் செலுத்தி பாசன கிணறுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கும் வழியில்லை.

விரைவாக மின் இணைப்பு பெறுவதற்கான தட்கல் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் பயன்பெற, 8 குதிரைத் திறன் வரை உள்ள மின் மோட்டார்களை பயன்படுத்த 2.50 லட்சமும், 7.5 குதிரைத்திறன் உள்ள மின் மோட்டார்களை பயன்படுத்த 2.75 லட்சமும், 10 குதிரைத்திறன் மின்மோட்டார் பயன்படுத்த 3 லட்சமும், 15 குதிரைத்திறன் மின்மோட்டார் பயன்படுத்த 4 லட்சமும் ஒருமுறை கட்டணமாக செலுத்த வேண்டும் என அரசு அறிவிக்கிறது. ஆனால், ஆண்டுக்கு அதிகபட்சம் 500 இணைப்புகள்கூட இத்திட்டத்தில் வழங்குவதில்லை.

பாசனகிணறுகளும், ஏரிகளுமே நீராதாரம்

ஏரிகளும். பாசன கிணறுகளும் மட்டும் இல்லாவிட்டால், திருவண்ணாமலை மாவட்டம் பஞ்சம்,  பட்டினியால் எப்போதே சிதைந்திருக்கும். வட்டிக்கு கடன் வாங்கி, தாலியை அடகு வைத்து, கிணறுகளை தூர்வாரி விவசாயிகள் உழைப்பதால்தான், இன்றளவும் விவசாயம் காப்பாற்றப்படுகிறது. இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் கிணறுகளை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்ய முக்கிய காரணம், அரசு வழங்கும் இலவச மின்சாரம் மட்டுமே. உற்பத்தி செலவு, ஆட்கள் கூலி, உரம் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு நியாயமான விலையின்மை என துயரத்தில் தவிக்கும் விவசாயிகளுக்கு இருக்கின்ற ஒரே நம்பிக்கை இலவச மின்சாரம் மட்டுமே. இலவச மின்சாரத்தை தட்டிப்பறிக்க மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டால், திருவண்ணாமலை மாவட்டம் பாலைவனமாகும், பஞ்சம் பிழைக்க வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்வதும் அதிகரிக்கும்.

விவசாயத்துக்கு செய்யும் துரோகம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி அழகேசன் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஏற்கனவே வறட்சியால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். 8-வழிச்சாலை போன்ற திட்டங்களால், எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம், நிலம் பறிக்கப்படலாம் என்ற அச்சம் இன்னும் விவசாயிகளிடம் நீங்கவில்லை. இப்போது, மத்திய அரசின் புதிய சட்டத்தின் மூலம், இலவச மின்சாரத்தை அபகரிக்க நினைப்பது மிகப்பெரிய துரோகமாகும். இலவச மின்சாரம் இல்லாவிட்டால், திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயம் அழிந்துபோகும்.

இந்த மாவட்டத்தில் அணை பாசனம், ஆற்றுப்பாசனம் இல்லை. முழுக்க முழுக்க கிணற்று பாசனம் மட்டுமே. எனவே, இலவச மின்சாரம் என்பது மாநிலத்தின் உரிமை. அதில் மத்திய அரசு தலையிட கூடாது. இலவச மின்சாரத்தை பறிக்க நினைத்தால், ஒட்டுமொத்த உணவு உற்பத்தியும் பாதிக்கும். நாட்டுக்கே ஆபத்தை தரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: