இறுதி சடங்குக்கு ரூ.15,000 உதவி: ஆந்திர முதல்வர் உத்தரவு

திருமலை: ஆந்திராவில் கொரோனாவால் இறப்பவரின் இறுதி சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்கும்படி முதல்வர் ஜெகன் மொகன் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம், தாடேப்பள்ளி முகாம் அலுவலகத்தில் கொரோனா குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஜெகன் மொகன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், அவர் பேசியதாவது: கொரோனா மருத்துவமனைகள், தனிமை மையங்களில் சிறந்த மருத்துவ சேவை வழங்க வேண்டும். நோயாளிகளின் குறைகள் குறித்து புகார் தெரிவிக்க இலவச கால் சென்டர் எண்ணுடன் ‘விளம்பர பேனர்கள்’ அமைக்க வேண்டும். நோயாளிகளிடம் தினமும் போன் செய்து விசாரிக்க வேண்டும். சுகாதாரம், உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.  

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்ய வேண்டும். இதற்காக, இறுதி சடங்கு செலவுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளுக்கு நிரந்தர மையங்களை அமைக்க வேண்டும். யார், யாருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூற வேண்டும். கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் 17 ஆயிரம் மருத்துவர்கள், 12 ஆயிரம் செவிலியர்களை தயார்படுத்தி வைக்க வேண்டும். சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுத்தால், மருத்துவமனைக்கான அனுமதி ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: