கொரோனா வார்டு கழிவுகள் குடியிருப்பு பகுதியில் வீச்சு: திண்டுக்கல் கலெக்டர் கவனிப்பாரா?

திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பயன்படுத்தக்கூடிய உணவு கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை அதிகமானதையடுத்து சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் ஒரு பகுதியில் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கே பணிபுரியும் ஊழியர்களுக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும் தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும் உணவுகளை அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளிலும், டப்பாக்களில் நிரப்பப்பட்டு கொடுக்கப்படுகிறது. இந்த பொருட்களை பயன்படுத்தி விட்டு மீதமுள்ள கழிவுகளை கல்லூரி காம்பவுண்ட் சுவர் அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் வீசிச் செல்கின்றனர். அந்தக் கழிவு உணவுகளை தெருநாய்கள் இழுத்துச் சென்று குடியிருப்பு பகுதிகளில் போட்டு விடுகிறது. இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் கொரோனா தடுக்க வேண்டிய அரசு கொரோனாவை பரப்பும் வேலையில் ஈடுபட்டு உள்ளதாக வேதனையோடு தெரிவித்தனர். இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: