அதிகரித்து வரும் கொரோனா தொற்று; சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா ரத்து: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

வத்திராயிருப்பு: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா தடுப்பு ஊரடங்கால் கடந்த மார்ச் 24 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை மிகவும் விமர்சையாக நடக்கும்.

இவ்விழாவிற்கு 2 நாட்களுக்கு முன்பே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து விடுவர். நடப்பாண்டுக்கான ஆடி அமாவாசை வரும் 20ம் தேதி வருகிறது. இது தொடர்பாக கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:-சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவானது, கொரோனால் ஊரடங்கால் ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பக்தர்களுக்கு அனுமதியில்லை. எனவே பக்தர்கள் வருவதை முற்றிலும் தவிர்த்து கோயில் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: