ஆந்திராவில் பெய்துவரும் கனமழையால் மோர்தானா அணையில் நீர்வரத்து அதிகரிப்பு: குடியாத்தம் அருகே விவசாயிகள் மகிழ்ச்சி

குடியாத்தம்:  ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் குடியாத்தம் மோர்தானா அணையில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   ஆந்திர-தமிழக எல்லையோரம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணை கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக விளங்குவது இந்த அணை. குடியாத்தம் பகுதியில் முக்கிய நீராதாரமாக விளங்கும்  இந்த அணையின் நீளம் 392 மீட்டர், உயரம் 23.9 மீட்டர், அணையின் நீர்த்தேக்க உயரம் 11.5 மீட்டர், அணையின் கொள்ளளவு 262 மில்லியன் கன அடி ஆகும்.

ஆந்திர மாநிலம் பலமனேர், புங்கனூர் மற்றும் அதன் சுற்று  வனப்பகுதியில் பெய்யும் மழைநீரால் இந்த அணை நிரம்புகிறது. கடந்த சில தினங்களாக ஆந்திர மாநிலத்தில் பெய்துவரும்  தொடர் கன மழையால் மோர்தானா அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 3.70 மீட்டர் வரை நீர் நிரம்பியுள்ளது.  இதேபோல் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வந்தால் அணை விரைவில் நிரம்பும். என எதிர்பார்ப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.  அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடியாத்தம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Related Stories: