கொரோனா தடுப்பில் ஆசிரியர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும்: ஐகோர்ட் கருத்து

சென்னை: தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த மனுவில், ஆசிரியர்களுக்கு போதுமான வசதி செய்து தராமல்  கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ‘‘ஆசிரியர்கள் களப்பணிக்கு அனுப்பப்படுவது இல்லை. தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளத்தான் அவர்களை கேட்டுள்ளோம்.

ஆசிரியர்கள் நேரடியாக களத்திற்கு செல்வதில்லை. அவர்கள் அலுவலக ரீதியான வேலைதான் பார்ப்பார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது’’ என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிரியர்களும் பொது ஊழியர்தான். அவர்களுக்கும் நாட்டின் மீது அக்கறை இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். தற்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பெண் காவலர்கள் கூட பணிபுரிந்து வரும் நிலையில், ஆசிரியர்களும் இந்த தருணத்தில் பணிபுரிய வேண்டும். தமிழக அரசு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து தந்துள்ளதால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories: