தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள 5 முன்னணி முதலீட்டாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி அழைப்பு

சென்னை: தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள 5 முதலீட்டாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அண்மையில் ரூ.15,128 கோடி முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்பொழுது, பெடக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் (மற்றும்) முதன்மை செயல் அலுவலர் பெரட்ரிக் டபிள்யு ஸ்மித் மற்றும் யுபிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டேவிட் பி அப்னே, ஆகிய 2 முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவன தலைவர்களுக்கும் மற்றும் சவுதி அரெம்கோ நிறுவனத்தின் தலைவர் அமின் எச் நாசர், எக்ஸன் மொபில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் டாரன் வுட்ஸ் மற்றும் சிபிசி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜியா ருயே ஊ ஆகிய 3 முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: