இன்று மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்: தென்மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை

சென்னை:  கொரோனா்  பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் வேகம் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதனால் தமிழகத்தில் தினசரி 4,200 பேர் பாதிக்கப்படுகிறார்கள். சென்னையில், கடந்த 19ம் தேதியில் இருந்து ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரு வகையில் பலன் கிடைத்தது. சென்னையில் தினசரி நோயின் தாக்கம் 2,000 என்று இருந்த நிலை மாறி, தற்போது தினசரி சுமார் 1,200க்கும் குறைவாக உள்ளது.  

அதே நேரம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் தினசரி 65ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா தொற்று குறைந்தாலும், தென்மாவட்டங்களில் குறிப்பாக கிராம பகுதிகளில் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தென்மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்தாலும், தென்மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை எடுத்து முக்கிய முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அதேபோன்று, தற்போது கிராமப்பகுதிகளில் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் வரும் கோயில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ஆகஸ்டு 1ம் தேதி முதலே தமிழகத்தில் நடைமுறைக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

Related Stories: