கோவையில் ஊரடங்கை மீறி செயல்பட்ட நகைப்பட்டறைக்கு சீல்

கோவை: கோவையில் ஊரடங்கை மீறி செயல்பட்ட நகைப்பட்டறைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோவையில் மளிகை கடை, பெட்டிக் கடைகள், ஜவுளிக்கடை, நகைக்கடைகள், காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

மேலும் தொழிற்சாலைகளும் எதுவும் இயங்கவில்லை. அதையும் மீறி கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் எதுவும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறதா? என்பது குறித்து கண்டறிவதற்காக மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று தனிப்படையினர் கோவை மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட சலீவன் வீதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது முழு ஊரடங்கு உத்தரவை மீறி நகை பட்டறை ஒன்று செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அத்துடன் அந்த பட்டறைக்குள் 9 தொழிலாளர்கள் பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து  மாநகராட்சி தனிப்படை அதிகாரிகள் அந்த நகைப்பட்டறைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும்  உத்தரவிட்டனர்.

Related Stories: