ராஜஸ்தான் அரசியலில் நீடிக்கும் குழப்பம்; பாரதிய ஜனதா கட்சியில் நான் இணைய போவதில்லை...சச்சின் பைலட் பரபரப்பு பேட்டி..!!!

தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைய போவதில்லை என ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மோதல்:

ராஜஸ்தானில் கடந்த 2018ல் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் 107 எம்எல்ஏக்களைப் பெற்ற காங்கிரஸ், சுயேச்சை உட்பட உதிரிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. அப்போது, இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கு முதல்வர்  பதவி தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூத்த தலைவர் என்ற முறையில் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சச்சின் பைலட் அதிருப்தி அடைந்தார். துணை முதல்வரான சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களான சுமார் 25  எம்எல்ஏக்களும் கெலாட் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை என கூறப்படுகிறது. இந்த உட்கட்சி பூசலை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க பாஜவும் திட்டம் தீட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு:

இதற்கிடையே, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ குதிரைப்பேரம் நடத்துவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நேற்று முன்தினம் மீண்டும் குற்றச்சாட்டு சுமத்தினார். எங்கள் எம்எல்ஏக்களுக்கு ரூ.25 கோடி தருவதாக  அவர்கள் விலை பேசி இருக்கிறார்கள். முன்பணமாக ரூ.10 கோடியும், ஆட்சியை பிடித்ததும் ரூ.15 கோடி தருவதாகவும் பேரம் பேசியிருக்கிறார்கள். கோவா, வடகிழக்கு மாநிலங்களில் அவர்கள் எப்படி ஆட்சியை பிடித்தார்கள் என்பது அனைவரும்  அறிந்த கதை. எங்கள் ஆட்சி நிலையாக இருக்கிறது. அது மட்டுமல்ல, நிச்சயம் ஐந்தாண்டு ஆட்சியை நாங்கள் நிறைவு செய்வோம் என்றார். இந்த குற்றச்சாட்டை பாஜ மறுத்தது. ‘உட்கட்சி பூசலை சமாளிக்க முடியாமல் பாஜ மீது பழி  போடுகிறார்’ என பதிலடி தரப்பட்டது.

சச்சின் பைலட் அறிக்கை:

ராஜஸ்தான் காங்கிரசில் குழப்பம் நிலவி வரும் நிலையில், துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்த பரபரப்பான சூழலில் சச்சின் பைலட் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  எனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. ராஜஸ்தானில் கெலாட் அரசு, பெரும்பான்மையிழந்து விட்டது. ஜெய்ப்பூரில் அசோக் கெலாட் தன் வீட்டில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் நானும், என் ஆதரவு  எம்.எல்.ஏ.,க்களும், பங்கேற்க மாட்டோம். காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க, எனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறியிருந்தார்.

சச்சின் பைலட் பேட்டி:

இதற்கிடையே, கடந்த மார்ச் முதலே பாரதிய ஜனதாவுடன் ரகசிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் சச்சின் பைலட், பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து இன்று அக்கட்சியில் இணைவார் என்று தகவல் வெளியாகியது.

இந்நிலையில், இந்த தகவலை மறுத்துள்ள சச்சின் பைலட், தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைய போவதில்லை என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து:

ராஜஸ்தானில் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 200 ஆகும். அதில் மெஜாரிட்டிக்கு 101 பேர் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.,க்களும், 10 சுயேட்சை ஆதரவு அளிக்கின்றனர். பா.ஜ.,விற்கு 73 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் அவரது இல்லத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்  97 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 16 ஆக  குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜவில் இணைந்ததால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அதே போன்ற நிலை ராஜஸ்தானிலும் ஏற்படக் கூடாது என்பதில் அக்கட்சி மிகுந்த  கவனத்துடன் செயல்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. எனவேதான், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கேள்விக்குறியாகி உள்ளது.

Related Stories: