ராமநாதபுரம் நிதி நிறுவன மோசடி வழக்கில் திடீர் திருப்பம்!: சினிமா தயாரிப்பாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்!!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நிதி நிறுவன மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஆனந், சென்னையை சேர்ந்த நீதிமணியுடன் இணைந்து நடத்திய நிதி நிறுவனத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் ஏஜெண்டாக செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால், மாதம் 5 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்கப்படும் என்றும்,  5 ஆண்டுகள் கழித்து இருமடங்காக 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தைகளை கூறி அனைவரையும் ஏமாற்றியுள்ளனர்.

 இதனால் ஏராளமானோர் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். நிதி நிறுவனம் தொடங்கிய சில மாதங்களில் பல கோடி ரூபாய் முதலீடு குவிந்துள்ளது. இந்நிலையில் முதலில் சில மாதங்கள் வட்டியை சரியாக கொடுத்து வந்தவர்கள், அதன்பிறகு ஏமாற்ற தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் ஆனந் மற்றும் நீதிமணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளி ஆசிரியர்களை குறிவைத்து மோசடி நடத்தி இவர்கள் 12 கோடி ரூபாய் வரை பணத்தை சுருட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், மோசடி செய்த பணத்தை சினிமா தயாரிப்பில் முதலீடு செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், பிரபல சினிமா தயாரிப்பாளர் 3 பேருக்கு இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் மோசடி கும்பலுக்கும் இடையே நடைபெற்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்த முக்கிய ஆவணங்கள் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளன. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் 3 சினிமா தயாரிப்பாளர்களையும் அழைத்து விசாரணை நடத்துவதாக காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: