புழல் ஜிஎன்டி சாலையில் உடைந்து விழும் சிக்னல் கம்பங்கள்: வாகன ஓட்டிகள் அச்சம்

புழல்: புழல் ஜிஎன்டி சாலையில் கதிர்வேடு சந்திப்பு, புழல் - அம்பத்தூர் சாலை, மத்திய சிறைச்சாலை, காவாங்கரை, சாமியார் மடம், செங்குன்றம் - வடகரை சாலை சந்திப்பு, திருவள்ளூர் கூட்டு சாலை என பாடியநல்லூர் வரை 8 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சிக்னல் கம்பங்கள் மற்றும் விளக்குகள் முறையான பராமரிப்பின்றி பல இடங்களில் பழுதடைந்துள்ளன. சிக்னல்கள் செயல்படாததால், சென்னையில் இருந்து புழல், செங்குன்றம், சோழவரம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சென்று வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

புழல் பகுதியில் டிராபிக் போலீசாரும் பணியில் இல்லாதால், அங்கு வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி பல இடங்களில் சிக்னல் கம்பங்கள் துருபிடித்து, வலுவிழந்துள்ளன. இவை, பலத்த காற்று வீசும்போது உடைந்து விழும் நிலையில் உள்ளன. இவற்றை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், புழல் - அம்பத்தூர் சாலை சந்திப்பில் துருப்பிடித்த நிலையில் இருந்த சிக்னல் கம்பம் நேற்று முன்தினம் திடீரென முறிந்து விழுந்தது. அப்போது, அவ்வழியே வாகனங்கள் ஏதும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கு முன்பு, கடந்த வாரத்தில் ஒரு சிக்னல் கம்பம் உடைந்து விழுந்தது. இதேபோல் மற்ற சிக்னல் கம்பங்களும் உடைந்து விழும் நிலையில் உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவற்றை சீரமைப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், புழல் ஜிஎன்டி சாலையில் உள்ள பழுதடைந்த சிக்னல் மற்றும் கம்பங்களை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: