3 மூத்த அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: தலைமை செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு: இன்றும் சுத்தப்படுத்தும் பணி தொடரும்

சென்னை:  சென்னை, தலைமை செயலகத்தில் மட்டும் தினசரி 3,000க்கும் மேற்பட்டோர் பணிக்கு வருகின்றனர். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட தலைமை செயலக ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினர் 150க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், செல்லூர் ராஜு உள்ளிட்ட 3 பேர், ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர், குருப்-1 அதிகாரிகள் முதல் டி பிரிவு அலுவலர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைமை செயலாளரின் உத்தரவுபடி, சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள தலைமை செயலகத்தில் சுமார் 32 துறை அலுவலகங்களும் ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டு கிருமி நாசினி அடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மாதத்தின் 2வது சனிக்கிழமை (11ம் தேதி) என்பதாலும், மூத்த அமைச்சர்கள், பணியாளர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஊழியர்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி தலைமை செயலக ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. ேநற்று காலை 9 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் ராட்சத வாகனங்களுடனும், மாநகராட்சி பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கோட்டை வளாகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் ராட்சத வாகனங்களில் உள்ள பெரிய குழாய் மூலம் தலைமை செயலகத்தில் வெளிப்புற கட்டிடங்கள் முழுவதும் கிருமி நாசினியை பீய்ச்சி அடித்தனர்.

அதேபோன்று தலைமை செயலகம் உள்ள அனைத்து அலுவலகங்களையும் திறந்து சுத்தப்படுத்தி, கிருமி நாசினி அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளின் அறைகளிலும் கிருமிநாசினி அடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 அமைச்சர்கள் அறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி கிருமி நாசினி அடிக்கப்பட்டது. இந்த இன்றும் தொடரும். சென்னை தலைமை செயலகம் போன்று சென்னையில் உள்ள எழிலகம், பள்ளி கல்வி துறை அலுவலகம், டிஎம்எஸ் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களையும் நேற்றும், இன்றும் சுத்தப்படுத்தி, கிருமி நாசினி அடிக்கப்பட்டுகிறது.

Related Stories: