தமிழகத்தில் தேர்தலுக்கான அதிமுக வியூகம்: தேர்தல் ஆலோசகர், மாஜி உளவு ஐஜி புதிய கூட்டணி

* 90 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் பற்றி திடுக் தகவல்கள் அம்பலம்

* தமிழகத்தில் 10 நாளில் சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட 90 உயரதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

* அமைச்சர்கள், டிஜிபி திரிபாதி, உளவுத்துறை ஐஜி  ஈஸ்வரமூர்த்தி ஆகியோரையும் மீறி டிரான்ஸ்பர் நடந்துள்ளது.

* போலீஸ் உயரதிகாரிகள் ரகசியமாக தயாரித்த டிரான்ஸ்பர் கோப்பு, அரசு துறையில் இல்லாத தேர்தல் ஆலோசகர்களான நபர்களுக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து சென்றது.

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து 90 போலீஸ் அதிகாரிகள் மாற்றத்தை அதிமுகவின் தேர்தல் ஆலோசகரும், மாஜி உளவுத்துறை ஐஜி ஆகியோர் சேர்ந்துதான் செய்துள்ளனர் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 31ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட 39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். அதில் ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் என பல முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதில் பல அதிகாரிகள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மூலமாகவும், ஆளும் கட்சியில் பவர்புல்லாக உள்ள விஐபிக்கள் மூலமாகவும் பதவியை பிடித்தனர் என்று கூறப்பட்டது.

இந்தப் பதவிகளைப் பொறுத்தவரை ஒரு சில திறமையான அதிகாரிகள் இருந்தாலும், பெரும்பாலான பதவிகள் அரசியல் காரணங்களுக்காகவே நியமிக்கப்பட்டது தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் 51 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். அதிலும் ஆளும் கட்சிக்கு வேண்டியவர்கள், தங்கள் சொல்படி நடப்பவர்கள்தான் மாவட்டங்களில் எஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியானது. அதேநேரத்தில் மாவட்ட எஸ்பிக்கள் நியமனத்தில் பல அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் டிஜிபி திரிபாதி, உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி ஆகியோரையும் மீறி பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் கொடுத்த பட்டியல் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. இதற்கு புதிய அதிகார மையமே காரணம் என்று கூறப்படுகிறது. இது அதிகாரிகள் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இது குறித்து உள்துறை வட்டாரங்களில் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா காலத்திலும் தேர்தல் ஜூரம் தொடங்கிவிட்டது. மாநிலத்துக்கான பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடத்த வேண்டும். இதனால், இந்த ஜூலை மாதத்தைச் சேர்க்காமல், 8 மாதமே உள்ளன.

இந்த 5 மாதங்களும் எண்ணி முடிப்பதற்குள் காணாமல் போய்விடும். இதனால் அதிமுக சார்பில் தேர்தலை சந்திப்பதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பாஜகவும் பின்புலமாக இருந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர் சுனில், கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆலோசகராக இருந்ததாக கூறப்படுகிறது. அவரை பாஜக தலைவர் அமித்ஷா ஆலோசனையின்பேரில், தமிழக தேர்தல் ஆலோசகராக அதிமுகவுக்காக நியமிக்கப்பட்டார். அவர் தற்போது நுங்கம்பாக்கத்தில் அலுவலகம் அமைத்துள்ளார். அவருடன் தமிழக உளவுத்துறையின் முன்னாள் ஐஜி சத்தியமூர்த்தியும் கை கோர்த்துள்ளார். அவர்கள் இருவரும் தினமும் அலுவலகத்தில் ஆஜராகிவிடுகின்றனர்.

அதோடு தமிழக முக்கிய விஐபியின் மகனும் இந்த ஆலோசனையில் உடன் இருக்கிறார். அப்போதுதான் தேர்தலை எதிர்கொள்ள தற்போதே அதிகாரிகள் மாற்றத்தை செய்ய வேண்டும் என்று சுனில், சத்தியமூர்த்தி ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டு முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. முதல்வர் அலுவலகத்தில் இருந்த டிஜிபி திரிபாதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் 2 முறை பதவி மாற்றத்தின்போதும், பட்டியலை தயாரித்து முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார். முன்னதாக யாரை நியமிக்கலாம் என்று உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தியிடமும் ஆலோசனை நடத்தினார் முதல்வர். அதைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகத்துக்கு பட்டியல் வந்ததும், தேர்தல் ஆலோசகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை கேட்டு வாங்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலையும் ஆலோசகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை ஆய்வு செய்த ஆலோசகர்கள், புதிய பட்டியலை தயாரித்து முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் முதல்வர் அலுவலகத்தில் இருந்து மீண்டும் டிஜிபி திரிபாதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நாங்கள் கொடுக்கும் பட்டியலை தயாரித்து மீண்டும் அனுப்புங்கள் என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் திரிபாதி அனுப்பிய பட்டியலை வைத்து பணி மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்தப் பட்டியலில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கொடுத்த பட்டியலில் ஒருவர் கூட போடப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆலோசகர்களுக்கு வேண்டியவர்கள் மட்டுமே பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதில் குறிப்பாக, ஈரோடு எஸ்பி சக்திகணேசன் 3 ஆண்டுகள் முடித்துள்ளதால், நாமக்கல் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த மாவட்ட எஸ்பி அருளரசு, கோவை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை எஸ்பியாக இருந்த அரவிந்தன், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சண்முகப்பிரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே மாஜி உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்திக்கு வேண்டியவர்கள்.

அதேபோல, தற்போது திருநெல்வேலி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள மணிவண்ணன், ஏற்கனவே கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை என்று கடந்த 9 ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு பணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். தற்போது அவருக்கு 4வதாக மீண்டும் சட்டம் ஒழுங்கு பணி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அடையாறில் இருந்து பகலவனை அனுப்பியுள்ளனர். திருச்சியில் நேருவை கட்டுப்படுத்த ஜெயச்சந்திரனையும், விழுப்புரத்தில் பொன்முடியை கட்டுப்படுத்த ராதாகிருஷ்ணனையும் நியமித்துள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தலை மனதில் வைத்தே பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதேபோல சில மாவட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகளை மட்டும் மாற்றவில்லை. அவர்கள் அந்ததந்த மாவட்ட செல்வாக்கான அமைச்சர்களை பிடித்து வைத்திருந்ததால் அவர்களை மட்டும் மாற்றம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் திண்டுக்கல், கரூர், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகாரிகள் நியமனம் அந்த மாவட்ட அமைச்சர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக போலீஸ் துறை மாற்றங்கள் அனைத்தும் ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளது போலீஸ் உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் தோன்றியுள்ள இந்த புதிய அதிகார மையத்தின் பரிந்துரையால்  அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சில போலீஸ் உயரதிகாகிளும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Related Stories: