டெல்லியில் மாநில பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய முடிவு: மணீஷ் சிசோடியா

டெல்லி: டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்துக்கு அடுத்தப்படியாக டெல்லியில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். டெல்லியில் இதுவரை 1,09,140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 84,694 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை 3,300 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது.

இதனிடையே நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கல்வி நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கான இறுதியாண்டுத் தேர்வுகள், செமஸ்டர் தேர்வுகள் ஆகியவை நடத்த முடியாமல் நிலுவையில் உள்ளன. பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் மதிப்பீடு அளவுகளை அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: