கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் மருந்துகளை முன்கூட்டியே அனைத்து மக்களுக்கும் கொடுக்க தயக்கம் ஏன்? தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: கொரோனா வைரஸ் நோய்க்கு கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் போன்ற மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சித்த மருத்துவர்கள் கூறும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதி மக்களுக்கும் இவற்றை தமிழக அரசு கொடுக்க தயங்குவது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 1,30,261 பேர் ெகாரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதில் 82,324 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் 1,829 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிய போது நவீன மருத்துவத்துடன் நிலவேம்பு கசாயம் சேர்த்து வழங்கப்பட்ட போது நல்ல பலன் கிடைத்துள்ளது. அதேபோன்று தற்போது நவீன மருத்துவத்துடன் கபசுரக் குடிநீரையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

அதன்பிறகு ஆயுஷ் அமைச்சகம் சார்பில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், ஆடாதொடை மணப்பாகு போன்ற மருந்துகளையும், ஓமியோபதியில் ஆர்சனிக் ஆல்பம் 30சி போன்ற மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் இந்த மருந்துகளை வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்தது. ஆனால், அந்த அறிவிப்பை முறையாக செயல்படுத்தியது போன்று தெரியவில்லை. மேலும், ஆயுஷ்துறை பரிந்துரை செய்தும் தமிழக அரசு கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் முன்கூட்டிேய வழங்காமல் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட மண்டலங்களில் மட்டும் வழங்கினர். இதனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது.

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியபோது அலோபதி மருந்துகளுடன் நிலவேம்பு கசாயத்தை தமிழக அரசு சார்பில் சித்த மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளில் உள்ள மக்களுக்கும் வீடுவீடாக சென்று வழங்கினர். அதனால் டெங்கு காய்ச்சல் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடிந்தது. தற்போது, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழல்நிலையில் தமிழகம் முழுவதும் கபசுரக்குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் 30சி மருந்துகளை வழங்காமல் 100 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடி பகுதியில் மட்டும் 2 முகாம்களை உருவாக்கி அதில் குறைவான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தவித்து வருகிறது.

எனவே கபசுரக்குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் 30சி போன்ற மருந்துகளை அனைத்து பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வீடு வீடாக சென்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கபசுரக்குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் 30சி மருந்துகளை சென்னையில் மட்டும் வழங்காமல் கிராம பகுதிகளிலும் முன்கூட்டியே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதேபோன்று டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள், மருந்தாளுநர்களை ஈடுபடுத்தியது போன்று கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பணியில் ஆயுஷ்துறையை சேர்ந்தவர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.

ஆனால், தமிழக அரசு கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் போன்ற மருந்துகளை புறக்கணிப்பது போன்று ஆயுஷ் மருத்துவர்களையும் புறக்கணிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: