புதுக்கோட்டை அறந்தாங்கியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: தீக்குளிக்க போவதாக பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு!!!

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டாஸ்மாக் கடையை அகற்றா விட்டால் தீக்குளிக்க போவதாக மண்ணெண்ணெய் கேனுடன் பொதுமக்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அடுத்த வடக்கு அக்ரஹாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மதுக்கடை முன்பு மண்ணெண்ணெய் நிரப்பிய கேனுடன் போராட்டம் நடத்தினர். அப்போது தகவலறிந்து அங்கு அந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் கூறியதாவது, டாஸ்மாக் கடையானது விளைநிலங்களுக்கு அருகில் உள்ள சாலையில் அமைந்துள்ளதால், அப்பகுதி வழியே செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும்,  வயல்களில் பணிபுரியும் பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனாலும் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதனால் டாஸ்மாக் கடையை அகற்றும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் வடக்கு அக்ராஹாரத்தில் மதுக்கடை திறக்கப்போவதில்லை என உறுதியளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: