தமிழகத்தில் 3வது அமைச்சருக்கும் கொரோனா!.. மனைவியை அடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் தொற்று உறுதி; தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் அன்பழகனைத் தொடர்ந்து தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன், மனைவி, மருமகள் மற்றும் கார் ஓட்டுநர் என அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  ஜெயந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மனைவி ஜெயந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3வது அமைச்சர் இவர் ஆவார். மேலும் 8 எம்எல்ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: