தஞ்சை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு இழப்பீட்டை வட்டியுடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சை: பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை காலந்தாழ்ந்து வழங்கப்படுவதால் வட்டியுடன் சேர்த்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் விவசாயிகளை வஞ்சித்துவிட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் விவசாயிகள் கடந்த 2019ம் ஆண்டு குறுவைக்கும், சென்ற நவம்பர் மாதத்தில் சம்பா, தாளடி சாகுபடிக்கும் தமிழக அரசின் வேளாண்மை, கூட்டுறவுத்துறையின் அறிவுரையின்படி காப்பீட்டுக்கான பிரிமீயத் தொகையை செலுத்தினர். அப்போது பயிர்களில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் பெருத்த மகசூல் இழப்பை சந்தித்தனர்.

ஆனால் பல மாதங்களாகியும் இழப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் 2019ம் ஆண்டு காரீப் பருவத்திற்கு 6673 விவசாயிகளுக்கு ரூ.5.51 கோடி பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவத்திற்கான இழப்பீட்டுத் தொகை கணக்கிடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர் அறுவடை முடிந்து பல மாதங்களாகியும் இழப்பீட்டு தொகையை வழங்காததால் இழப்பீட்டு தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் பொன்னவராயன்கோட்டை வீரசேனன் கூறும்போது, பயிர் காப்பீடு செய்யும் போது பிரிமீயத் தொகையை செலுத்த காலக்கெடு நிர்ணயித்து விவசாயிகளிடமிருந்து வசூல் செய்யப்படுகிறது.

ஆனால் இழப்பீட்டுக்கான காப்பீடு தொகையை தருவதற்கு ஏன் காலதாமதம் செய்கின்றனர் என தெரியவில்லை. எனவே காலந்தாழ்ந்து கொடுக்கப்படும் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து வழங்க அரசு முன் வர வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: