முதல்வர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால், மின்கட்டணம் குறித்த சலுகைகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

சென்னை : கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கும் அநியாய உத்தரவை அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி இருப்பது பொறுப்பற்ற பொல்லாச் செயல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரிடரைக் காரணம் காட்டி டெண்டர் விதிகளை மீறும் போது மின்கட்டணச் சலுகை மட்டும் அளிக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பிய அவர், முதலமைச்சர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால், மின்கட்டணம் குறித்த சலுகைகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சாரச் சட்ட விதிகளை உயர்நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டி, அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிக்கும் அநியாய உத்தரவை அ.தி.மு.க. அரசு நியாயப்படுத்துவது வேதனையாக இருக்கிறது.

200 முதல் 500 யூனிட்டிற்குள்ளும், 500 யூனிட்டிற்கு மேல் ஒரு யூனிட் அதிகமாக மின்சாரம் பயன்படுத்துவோரின் இல்லங்களுக்கு எல்லாம் கொடுக்கப்பட்டுள்ள மின்கட்டணத் தொகை அவர்களின் இதயத்தைத் தாக்கும் எலெக்ட்ரிக் ஷாக் ஆக அச்சுறுத்தி நிற்கிறது. இதை அ.தி.மு.க. அரசும், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் உடனடியாக கவனிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஆகவே, மின்சாரச் சட்டத்தின்கீழ் இருக்கும் மின் நுகர்வோர் நலனைப் பாதுகாப்பது என்ற அடிப்படைக் கோட்பாட்டினை மனதில் வைத்து, ஏற்கனவே பேரிடருக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட மின்கட்டணத்தின் அடிப்படையில் மின்கட்டணம் வசூல் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ரீடிங் எடுக்காததால், முந்தைய மாதத்தில் மின்நுகர்வோர் செலுத்திய மின்கட்டணத்திற்குரிய பணத்தைக் கழித்து பயனாளிகள் மீது தாங்கமுடியாத சுமையை ஏற்றாமல், அந்தப் பணத்திற்குரிய ரீடிங்குகளை கழித்து, மின்கட்டணத்தை மீண்டும் கணக்கிட்டு, மின் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மின்கட்டணம் செலுத்துவது - இனிவரும் நாட்களில் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ஆகியவற்றிற்கும் மானியம் அளிக்கவோ அல்லது நீண்டகாலத் தவணை முறையில் செலுத்தவோ ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமே மின்சாரச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அமைப்பு என்பதாலும், இது கொரோனா பேரிடர் காலம் என்பதாலும், கட்டணச் சலுகையை மின் நுகர்வோருக்குக் கொடுப்பதில் அ.தி.மு.க. அரசுக்கு எவ்வித தடையும் இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதுவும் இயலாது என்றால், கொரோனா காலத்திற்குரிய - அதாவது 31.7.2020 வரையிலான ஊரடங்குக் காலத்திற்குக் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது போல்- வீட்டுப் பயன்பாட்டிற்கான 70 சதவீத மின்கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என்று அறிவித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை விட, முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால், இந்த சலுகையைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: