பிளாஸ்மா சிகிச்சைக்கு’ ரத்தமாதிரி சேகரிக்கிறது; கொரோனாவில் மீண்டவர்களை தேடும் நெல்லை அரசு மருத்துவமனை: சென்னை, மதுரையை தொடர்ந்து செயல்படுத்த முடிவு

நெல்லை: கொரோனா உயிரிழப்பை தடுப்பதற்காக சென்னை, மதுரையை தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுவினர் தயாராகி உள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் இதற்கான ரத்தம் சேகரிக்க முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் ெகாரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களுக்கு இந்திய மருத்துவத்தின் கபசுரக் குடிநீர், ஹோமியோபதி மாத்திரை முறைகளும் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக நோய் பாதிப்பு எண்ணிக்கையில் இருந்து மீண்டு வருவோர் எண்ணிக்கை 56 சதவீதத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் விரைவாக குணமாகி வீடு திரும்புகின்றனர். அதே நேரத்தில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உயிரிழப்புகளை தடுப்பதற்காக பல்வேறு சிகிச்சை முறைகளும் கையாளப்படுகின்றன. இதில் முக்கிய சிகிச்சை முறையாக பிளாஸ்மா சிகிச்சை முறை பரிந்துரைக்கப்பட்டு அதன் மூலம் உயிரிழப்பு என்ற உச்சநிலைக்கு சென்ற பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகள் உள்பட நாடு முழுவதும் 44 மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை கடந்த 14ம் தேதி தொடங்கியது.

150க்கும் மேற்பட்டோர் பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக கொரோனா நோயாளிகள் 13 பேருக்கு பிளாஸ்மா முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 6 பேருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவில் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்மா சிகிச்சை என்பது ஏற்கனவே கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு முழுவதும் குணமாகி வீடு திரும்பியவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு அதில் சில எதிர்ப்பு சக்தி அணுக்களை பிரித்து கொரோனா அதிகம் பாதித்து உயிருக்கு ேபாராடுபவர்களின் உடலில் செலுத்தி அவர்களை நோயில் இருந்து மீட்பது ஆகும்.

சென்னை, மதுரையை தொடர்ந்து தற்போது நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு பயிற்சி பெற்ற டாக்டர்கள், தொழில் நுட்பனர்கள் மற்றும் அதற்குரிய மருத்துவ ஆய்வுகூட உபகரண வசதிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. இங்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் தயாராக இருந்தாலும் தொற்று அறிகுறிகளுடன் கொரோனா ஏற்பட்டு குணம் அடைந்து திரும்பியவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்காக தங்களது ரத்த மாதிரிகளை வழங்க தயங்குவதாக கூறப்படுகிறது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இவர்களில் பலரை தற்போது அரசு மருத்துவகல்லூரி மருத்துவக் குழுவினர் தொடர்பு கொண்டு உயிருக்கு போராடும் பிற கொரோனா நோயாளிகளை மீட்பதற்கு பிளாஸ்மா சிகிச்சைக்கான ரத்த மாதிரி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனாலும் இதுவரை ஒருவர்கூட முன்வரவில்லை என கூறப்படுகிறது.

எனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் ரத்தம் அளித்தால் மட்டுமே பிளாஸ்மா சிகிச்சை உறுதிப்படும் என நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் விரைவாக குணமாகி வீடு திரும்புகின்றனர். அதே நேரத்தில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உயிரிழப்புகளை தடுப்பதற்காக பல்வேறு சிகிச்சை முறைகளும் கையாளப்படுகின்றன. ஒரு மணி நேரம் போதும், உயிர் காக்கலாம் இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்து இதுவரை 5 பேர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழப்பை தடுப்பதற்கு உதவும் பிளாஸ்மா சிகிச்சைக்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அவர்களது ரத்த மாதிரியை கொடுப்பதற்கு முன்வரலாம் என நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அழைக்கிறது.

இவ்வாறு வருபவர்கள் அதிகபட்சம் ஒரு மணி நேரம் மட்டும் மருத்துவமனையில் செலவிட்டால் போதும். ரத்த தானத்திற்கு ரத்தம் எடுப்பது போல் அதிக ரத்தம் எடுப்பார்கள் என்ற அச்சம் வேண்டாம். நெல்லை மாவட்டத்தினர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களும் பிளாஸ்மா சிகிச்சைக்கு ரத்தம் தந்து கொரோனா உயிரிழப்பை தவிர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

பிளாஸ்மா சிகிச்சை அனுமதி பெற்ற மையங்கள்: 44

பிளாஸ்மாவால் மீண்டவர்கள்: 144 பேர்

சென்னையில் பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள்: 13 பேர்

இதில் மீண்டவர்கள்: 6 பேர்

Related Stories: