சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி விலக்களித்தால் அரசுக்கு ரூ.1,724 கோடி இழப்பு ஏற்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை: தமிழகத்தில் சரக்கு வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால், அரசுக்கு 1724.24 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், சரக்கு வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு மே 14ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், வரி விலக்கு வழங்க கோரியும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் முருகன் வெங்கடாச்சலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் தமிழக உள்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ஊரடங்கு காரணமாக கனரக வாகனங்கள் இயக்கப்படவில்லை என்பது தவறு.

சரக்கு வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களின் தகுதிச் சான்று, பதிவுச் சான்று, பெர்மிட் ஆகிய மோட்டார் வாகன சட்ட ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன வரி செலுத்த காலஅவகாசத்தை நீட்டிப்பதை பொறுத்தவரை அது உள்துறை சம்பந்தப்பட்டது அல்ல. மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கு ஏற்கனவே ஜூன் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரி செலுத்த விலக்கு அளித்தால் அரசுக்கு 1724.24 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஊரடங்கு காலத்தில் சரக்கு வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்படாததால், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: