17 நாள் முழு ஊரடங்குக்கு பிறகு சென்னையில் இயல்பு நிலை திரும்பியது: சாலைகளில் போக்குவரத்து நெரிசல்; அனைத்து கடைகளும் திறப்பு; இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம்

சென்னை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. இதனையடுத்து ஓட்டல்கள், இறைச்சி, டீ கடைகள் உள்ளிட்டவை நேற்று காலை திறக்கப்பட்டன. ஆட்டோ, டாக்சிகள் ஓடத் துவங்கின. இதனால் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியுள்ளது. நகர் முழுவதும் வாகனங்கள் அதிகமாக ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நோய் தொற்றை தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இதை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ள பகுதிகளில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் 19ம் தேதி முதல் முழுவதுமாக மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால் தேவையில்லாமல் பலர் வெளியில் வருவது தவிர்க்கப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. இதை பயன்படுத்தி நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு களப்பணியாளர்கள் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன் எதிரொலியாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து, நேற்று காலை 6 மணிக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் டீக்கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல இறைச்சி கடைகள், காய்கறிகடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் உரிமையாளர்கள் ஆர்வமுடன் திறந்தனர்.

இந்த கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கலாம். ஓட்டல்களை பொறுத்தவரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கலாம். ஆனால் பார்சல்கள் மட்டுமே வழங்கலாம். டாக்சிகள், ஆட்டோக்கள் காலை முதல் இயக்கப்பட்டன. டாக்சிகளில் பயணிகள் 3 பேர், ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் பயணம் செய்யலாம். வர்த்தக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என்பதால் காலை முதலே ஊழியர்கள் பணிக்கு வரத் தொடங்கினர். தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

சலூன்கள், அழகு நிலையங்கள் ஏசி இல்லாமல் இயங்கலாம் உள்ளிட்ட தளர்வுகள் நேற்று காலை முதல் அமலுக்கு வந்தன. கடந்த 17 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தளர்வு ஏற்பட்டுள்ளதால், நகர் முழுவதும் ஏராளமான மக்கள் சாலைகளில் வாகனங்களில் பயணித்தனர். முடக்கப்பட்ட முக்கிய சாலைகள் திறக்கப்பட்டன. இதனால், சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசார் நேற்று சாலைகளில் இல்லாததால், பல இடங்களில் நெரிசல் இருந்தது. போலீசார் தானியங்கி சிக்னல்களை இயக்கினர். மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியுள்ளதால், இதுவரை மக்கள் மத்தியில் நிலவி வந்த பொருளாதார சிக்கல் ஓரளவு தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: