கடனாநதி அணை அடிவாரத்தில் வாழைகளை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்: விவசாயிகள் கவலை

கடையம்: கடனாநதி அணை அடிவாரத்தில் பயிரிட்டுள்ள வாழை உள்ளிட்டப் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே கடனாநதி அரசபத்து கால்வாய் பாசனத்தில் சுமார் 1500 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்து வருகின்றனர். பிரதான பயிராக நெல் உள்ள நிலையில் கடந்த 2018 முதல் போதிய மழை, தண்ணீர் இல்லாததால் நெல் விவசாயம் பொய்த்துப் போய் உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் சிறுகிழங்கு, சேனைகிழங்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது கடனாநதி அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுப்பன்றி, கரடி, மான், மிளா உள்ளிட்டவைகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் பெரும் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அழகப்பபுரத்தைச் சேர்ந்த விவசாயி வேலாயுதம் கூறியதாவது, 2018ல் இருந்து 3 ஆண்டுகளாக போதியமழை மற்றும் தண்ணீர் இல்லாததால் நெல் பயிரிட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகிறோம். இவற்றையும் காட்டுப்பன்றிகள், மிளா உள்ளிட்டவை விளைநிலங்களுக்குள் புகுந்து நாசப்படுத்தி வருகின்றன.

எனது வயலில் ஒரு ஏக்கரில் பயிரிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட வாழையை தோண்டி நாசப்படுத்திவிட்டன. இதுகுறித்து வனத்துறையிடம் பலமுறை முறையிட்டும் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக சோலார் மின்வேலி அமைக்க விவசாயிகளை வலியுறுத்தி வருகின்றனர்.

3 ஆண்டுகளாக விவசாயம் பாதித்துள்ள நிலையில் தற்போது பயிர்களும் வனவிலங்குகளால் சேதமடைந்து பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது மின்வேலி அமைக்க முதலீடு செய்யும் நிலையில் விவசாயிகள் இல்லை. எனவே வேளாண்துறை மூலம் பாதி மானிய விலையில் தரும் சோலார் மின்வேலியை வனத்துறையும் இணைந்து முழு மானியத்தில் வழங்கினால் மட்டுமே விவசாயிகள் மின்வேலி அமைத்து பயிர்களை மட்டுமின்றி விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்றார்.

Related Stories: