நியாயவிலை கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.926 கோடி மானியங்கள் வழங்காததால் கடும் நிதி நெருக்கடி: தமிழ்நாடு கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: நியாய விலை கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் அரசு வழங்க வேண்டிய ரூ.926 கோடி மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி கூறியதாவது: தமிழகத்தில் கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் பொது விநியோகத் திட்டத்தின்படி 32 ஆயிரம் நியாய விலை கடைகள் 270 மண்ணெண்ணெய் விநியோக மையங்கள் நடத்தி வருகிறது. இதில் 27 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்களுக்கு ஊதியம், கடை வாடகை, லாரி வாடகை, மின் கட்டணம், ரிப்பேரிங் கூலி செலவு போன்ற செலவினங்களுக்கு ஆண்டுதோறும் அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 2018-2019, 2019-2020 ஆகிய 2 ஆண்டுகளுக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.700 கோடி மானியம் வழங்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மார்ச்சில் டிஎன்சிஎஸ்சி கிடங்குகளில் காசோலை கொடுத்து குடிமைப்பொருள்கள்கொள்முதல் செய்து இருப்பு வைத்திருந்த குடிமைப் பொருள்களை கொரோனா வைரஸ் அரசு நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரலில் நியாய விலைக்கடைகளில் இலவசமாக வழங்கிய வகையில் கூட்டுறவு சங்கங்களுக்கு சுமார் ரூ.50 கோடி மானியம் வழங்க வேண்டும்.கொரோனா வைரஸ் நிவாரணப் பணியின்படி ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் குடும்ப அட்டைதாரார்களுக்கு இலவசமாக குடிமைப்பொருள்கள் நியாய விலைக்கடையில் வழங்கிய வகையில் அரிசி குவின்டால் ஒன்றுக்கு ரூ.79, கோதுமை, பருப்பு, பாமாயில் தலா குவின்டால் ஒன்றுக்கு ரூ.88 சீனி குவின்டால் ஒன்றுக்கு ரூ.22 வீதம் தினசரி கொள்முதல் விளிம்புத் தொகை கூட்டுறவு சங்கங்களுக்கு டிஎன்சிஎஸ்சி ரூ.150 கோடி வழங்க வேண்டும்.

அரசு உத்திரவின்படி 26 ஆயிரம் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு போக்குவரத்து பயணப்படி இரண்டு மாதங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கிய வகையில் ரூ.26 கோடி அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வருவாய் இன்றி செலவினங்களை மட்டும் செய்து கடும் நெருக்கடியில் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு பொதுமக்களின் நலனுக்காக நிதிகளை வாரி வழங்கும் தமிழக அரசு, இத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்காக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926 கோடி மானியத்தினை அரசு உடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: