டிராபிக் இன்ஸ்பெக்டர் உட்பட 35 போலீசாருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உட்பட 35 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் ஊரடங்கு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உட்பட மாநகர காவல் துறையில் 35 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் உட்பட 35 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐஐடி மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இவர்களுடன் பணியாற்றிய சக போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை 1,302 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றில் இருந்து நேற்று வரை மொத்தம் 582 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

புழல்: சென்னை புழல் மத்திய சிறையில் பணிபுரியும் 4 ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், தண்டனை பிரிவில் பணியாற்றும் 40, 28 மற்றும் 23 வயதான 3 காவலர்களுக்கு கொரோனா நேற்று நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் புழல் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் பணியில் இருக்கும் போலீசார் இடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. செங்குன்றம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் 30 வயதுடைய பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இங்கு ஏற்கெனவே ஒரு பெண் உள்பட 4 காவலர்களுக்கு நோய்தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, செங்குன்றம் காவல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: