முழு ஊரடங்கால் முடங்கியது தமிழகம்: அனைத்து கடைகளும் மூடல், சாலைகள் வெறிச்சோடின

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கால் நேற்று தமிழகம் முழுவதும் முடங்கியது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனங்கள் இயங்காதால் சாலைகள் வெறிச்சோடின. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதி தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்தை தாண்டி உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தொடர்ந்து மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் என பல மாவட்டங்களில் நோயின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த மாதம் 19ம் தேதி முதல் நேற்று வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைதொடர்ந்து மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாவட்டங்களை விட்டு மாவட்டம் செல்லவும், பொது போக்குவரத்துக்கும் தமிழக அரசு தடை விதித்தது. மருத்துவம் அவரச தேவை, அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் மருத்துவம் தவிர்த்து எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்தது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அனைத்து மாவட்ட எல்லைகளிலும் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதேபோல், அனைத்து மேம்பாலங்கள், முக்கிய சாலைகள் அனைத்தையும் தடுப்புகள் அமைத்து போலீசார் மூடினர். காலையில் 2 மணி நேரம் மட்டும் பால் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மற்ற எந்த அத்தியாவசிய கடைகளுக்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை.

அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள்  உத்தரவுப்படி போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வந்த அனைத்து வாகனங்களும் சோதனை சாவடிகளிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி விடப்பட்டது. மருத்துவ தேவைக்காக இ-பாஸ் உடன் மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வந்த வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். இதனால் மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

மதுரை, சேலம், கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் முழுவதும் முடக்கப்பட்டது.  சில இடங்களில் அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைத்தனர். பல இடங்களில் தடையை மீறி வெளியே வந்த நபர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் நேற்று நடந்த முழு ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. அப்படி தடையை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் எப்போதும் கூட்டமாக காணப்படும் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி மயானம் போல் காட்சி அளித்தது.

மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று நடந்து முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தும் பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையை பொருத்தவரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.

மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் மாநகரம் முழுவதும் 288க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தற்காலிக வாகன சோதனை சாவடி அமைத்து தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். பொது முடக்கத்தால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முடங்கியது.

* வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வந்த அனைத்து வாகனங்களும் சோதனை சாவடிகளிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி விடப்பட்டன.

* மருத்துவ தேவைக்காக இ-பாஸ் பெற்று மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வந்த வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

* மாவட்டத்திற்குள் தடை மீறி வாகனங்களில் சுற்றிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

* முழு ஊரடங்கு உத்தரவை மீறி சில இடங்களில் திறக்கப்பட்ட கடைகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைத்தது.

Related Stories: