சித்தாமூர் ஒன்றியத்தில் வேளாண் துறையில் புதிய திட்ட பணிகள் துவக்கம்

செய்யூர்: சித்தாமூர் ஒன்றியத்தில் வேளாண் துறை சார்பில் புதிய திட்டப்பணிகளை, அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி கிராமத்தில் வேளாண் துறை சார்பில் நீடித்த நிலையான மானாவரி மேம்பாட்டு இயக்கம் என்ற புதிய திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

மாவட்ட வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, திட்டத்தை தொடங்கி வைத்து, திட்டப் பணிக்கு தேவையான உளுந்து விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்களை வழங்கினார். தொடர்ந்து, மணிலா விதைப்பு கருவி மூலம் விதைப்பினை தொடங்கி வைத்தார்.

பின்னர், ஏற்கனவே இத்திட்டத்தை செயல்படுத்தும் கொளத்தூர் கிராம உழவர் உற்பத்தியாளர் குழுவினரை நேரில் சந்தித்து விவசாயிகளுக்கு தேவையான பண்ணை கருவிகள், பயன்பாட்டு ஒப்பந்தங்களை வழங்கினார். அதன்பின், குழு தலைவர் தனசேகர் மூலம் செயல்படும் நாட்டு சர்க்கரை உற்பத்தி மையத்தையும், கரும்பு எஸ்எஸ்ஐ நாற்று உற்பத்தி, நிழல் வலை ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதில், வேளாண் துறை உயர் அதிகாரிகள் அசோகன், இணை இயக்குனர் சுந்தரம், துணை இயக்குனர்கள் சுகுமார், ரேவதி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: