கொரோனா தொற்றின் தீவிரத்தை தடுக்க பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும்: அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை

சென்னை: கொரோனா தொற்றின் தீவிரத்தை தடுக்க பொது இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போன்று, கைகழுவும் வசதியை அரசு  ஏற்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது ஒரு லட்சத்தையும் தாண்டி  தீவிர உச்சநிலையை அடைந்து வருகிறது. ஊரடங்கிற்கு மேல் ஊரடங்கு என்று அரசு நீட்டித்துக்கொண்டே செல்கிறது. சாமானிய மக்களும், அன்றாடம்  வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துபவர்களும் இதனால் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆட்பட்டுள்ளனர். சென்னைக்கு ஈடாக தற்போது தமிழகத்தின்  பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்தவாறு உள்ளது. குறிப்பாக, சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அமைச்சர்கள்  குழு, அதிகாரிகள் குழு உள்ளிட்டவைகள் அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது  உள்ளிட்டவைகள் மட்டுமே தற்போது உள்ள சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி என அரசும் கைவிரித்துவிட்டது. இதுபோன்ற  சூழ்நிலையில் அரசு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும்போது அவர்கள் கூடும் இடங்களில் கைகழுவும் வசதியை  ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம், 80 சதவீதம் தொற்றின் தீவிரத்தை குறைக்க முடியும் என அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை  வழங்கியுள்ளனர். இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,  திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்பு இருந்ததை விட தற்போது கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்தவாறு  உள்ளது.

இந்நிலையில், நாளை முதல் அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிக்கடைகளை தொடங்க அனுமதி, கிராமப்புற கோயில்களை திறக்க அனுமதி  என பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் முன்பு இருந்ததை விட தற்போது அதிக அளவிற்கு வெளியே வருவார்கள்.  குறிப்பாக, பொதுமக்கள் வெளியே வரும் போது கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேலும், வீட்டில் மட்டும்  இல்லாமல் வெளி இடங்களிலும் கைகளை அடிக்கடி கழுவுவது தற்போதுள்ள சூழலில் மிகவும் அவசியமான ஒன்றாகும். கைகளை அடிக்கடி கழுவுதல்  மூலம் 50 சதவீதமும், முகக்கவசம் அணிவதன் மூலம் 30 சதவீதமும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் 20 சதவீதமும் நாம் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த முடியும்.

எனவே, வெளி இடங்களில் பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவ ஏதுவாக கைகழுவும் முனையங்களை அரசு ஏற்படுத்த வேண்டும். இதேபோல்,  அங்கு ஒரு தன்னார்வலர் அல்லது மாநகராட்சி ஊழியரை சுழற்சி முறையில் பணியமர்த்தி தேவையான நேரத்தில் சோப்பு உள்ளிட்ட கிருமி நாசினிகள்  கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தெரு முனைகள், வழிபாட்டு தலங்கள், பேருந்து பணிமனைகள் உள்ளிட்ட இடங்களில் இம்முனையங்களை  அரசு ஏற்படுத்த வேண்டும். இதேபோல், காலை நேரங்களில் இந்த முனையங்களில் கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய  மருந்து வகைகளை வழங்க வேண்டும்.

வீடு வீடாக சென்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்வது போல இந்த மையங்களிலும் தெர்மல் ஸ்கேனர் வசதியை ஏற்படுத்தலாம். இதுபோன்ற  வழிமுறைகள் மூலமும் நாம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு கூறினர்.

Related Stories: