பல்கலை, கல்லூரி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: மத்தியஅரசு அதிரடி உத்தரவு

சென்னை: பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஜூலை 31ம் தேதிவரை வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் அனுமதி அளித்து மத்தியஅரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அது வரும் 31ம் தேதி இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு  முழுவதும் அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை எப்போது திறக்க வேண்டும், வகுப்புகள் எப்போது நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் பணிக்கு வர வேண்டும் என்று சில மாநிலங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 சதவீதம், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளன. இது ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணிக்கு வந்தவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பில் வற்புறுத்துகின்றனர்.

இது பெரும் பிரச்னையாக உருவெடுத்த நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று ஒரு அவசர கடிதத்தை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ) தேசிய தேர்வுகள் முகமை (என்இஏ) மற்றும் தன்னாட்சி பெற்ற பிற உயர்கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதிவரை மூடப்பட வேண்டும். இருப்பினும் கொரோனா தொற்று சூழல் கருதி, ஆன்லைன் வகுப்புகள், இடைவெளியுடன் கூடிய வகுப்புகளுக்கும் அனுமதிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள், பல்வேறு கல்விச் செயல்பாடுகளுக்கு இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் இந்த விதிகளை தங்களின் அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பின்பற்றுவதா வேண்டாமா என்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சூழல் கருதி, ஆன்லைன் வகுப்புகள், இடைவெளியுடன் கூடிய வகுப்புகளுக்கும் அனுமதிக்கப்படுகிறது.

Related Stories: