பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றும்போது பயண கட்டணம் அதிகரிக்கும், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும்: ரயில் பயணிகள் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: தற்போது 200 கி.மீ தூரத்துக்கு மேலாக இயங்கும் பயணிகள் ரயில்களை அனைத்தையும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யும்போது பயண கட்டணம் அதிகரிக்கும், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று ரயில் பயணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் முதலில் மதுரையிலிருந்து நாகர்கோவில் வழியாக புனலூருக்கு இயக்கப்படும் இரவு நேர பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்படும் என்று கொரோனா ஊரடங்கு முன்பாகவே அறிவிப்பு வெளியாகி ஜுலை 1ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படும் என்றும் முன்பதிவும் துவங்கியது. இந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது.

கடந்த மாதம் இரண்டாவது ரயிலாக நாகர்கோவில் - கோயம்பத்தூர் பகல்நேர பயணிகள் ரயில், கோவை  மங்களுர் பயணிகள் ரயில், காரைக்கால் - பெங்களுர் பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்படும் அறிவிப்பு வெளியாகி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் மூன்றாவது ரயிலாக நாகர்கோவில் - கோட்டையம் பயணிகள் ரயில் இந்த அறிவிப்பின்படி எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட இருக்கின்றது. பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யும் போது பயண கட்டணம் அதிகரிக்கும்.

இவ்வாறு அதிகரிப்பதால் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும். பயணிகள் கட்டண அதிகரிப்பு என்ற சுமை அறிவிக்கும் போது பயணிகள் வசதிக்காக இந்த ரயில்களை வேகத்தை அதிகரித்து அடுத்த ஊர்களுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். பயண கட்டணம் அதிகரித்து எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். போதிய வருவாய் இல்லை என்று கூறி சிறிய ரயில் நிலையங்களின் நிறுத்தங்கள் ரத்து செய்யப்படும். ரயில் நிறுத்தங்கள் ரத்து செய்வதால் போதிய வருவாய் இல்லை என்று கூறி ஒருசில ரயில்நிலையங்கள் மூடப்படலாம்.

இந்த ரயில்களில் அதிக கட்டணம் இருப்பதால் கிராம பயணிகளின் எண்ணிக்கை படிபடியாக குறையும். அடுத்த கட்டமாக அதிக கட்டணம் வசூலிக்கும் பொருட்டு 150 கி.மீ தூரம் உள்ள பயணிகள் ரயில்கள் 50 கி.மீக்கு மேல் உள்ள ஊர்களுக்கு நீட்டிப்பு செய்து எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்ற அதிக வாய்ப்பு உள்ளது. இது போன்று 100கி.மீ ஒரு ரயிலும் 100 கி.மீட்டரில் இயங்கும் மற்றொரு ரயில் என இரண்டு ரயில்களையும் இணைத்து ஒரே ரயிலாக மாற்றி எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படலாம்.

ஆனாலும் ஒரு சில நன்மைகளும் உள்ளது. படிப்படியாக ரயிலின் வேகம் அதிகரித்து பயணநேரம் குறைக்கப்பட்டு காலஅட்டவணையிலும் மாற்றம் வரும். முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும். அருகில் உள்ள ஊர்களுக்கு இந்த ரயில்களை நீட்டிப்பு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் கூடுதல் ஊர்களுக்கு ரயில் இணைப்பு கிடைக்கும். ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும். ரயில்களின் பராமரிப்புகளில் மாற்றம் மற்றும் புதிய எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றி இயக்க வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு ரயில் பயணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: