2 மீனவர்களை சுட்டுக் கொன்றதற்காக இத்தாலியிடம் இழப்பீடு கோரலாம் : சர்வதேச தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் இந்தியாவிற்கு வெற்றி!!

திருவனந்தபுரம் : கேரள மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றதற்காக இத்தாலியிடம் மத்திய அரசு இழப்பீடு கோரலாம் என்று சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள் இத்தாலி கடற்படைவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 இத்தாலி கடற்படை வீரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இத்தாலி வீரர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வரவில்லை என்று அந்நாட்டு அரசு கூறி வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், இத்தாலி வீரர்கள் விதிகளை மீறி, நடந்து கொண்டதாக தீர்ப்பளித்துள்ளது. உயிரிழந்த மீனவர்களுக்காக இந்திய அரசு இழப்பீடு கோரலாம் என்று சர்வதேச தீர்ப்பாயம் தெரிவித்து இருக்கிறது.

அதே வேளையில் இத்தாலி கடற்படை வீரர்களை கைது செய்து இந்தியாவில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை சர்வதேச தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது.  சர்வதேச ஐநா சட்டப்படி இந்தியா, இத்தாலி வீரர்களை இந்திய நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது, அவர்களை கைது செய்ய முடியாது என்று சர்வதேச தீர்ப்பாயம் கூறியுள்ளது. கடற்படை வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதாக இத்தாலி அரசு சர்வதேச தீர்ப்பாயத்தில் உறுதி அளித்து இருக்கிறது. சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவு, இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: