வாலாஜாபாத் பேரூராட்சியில் உபகரணங்களை பயன்படுத்த தெரியாத அலுவலர்கள்: கொரோனா பரிசோதனையில் குளறுபடி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க, வீடு வீடாக சென்று, பொதுமக்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, பேரூராட்சி ஊழியர்கள், குழுக்களாகப் பிரிந்து தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று, பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என பரிசோதனை செய்கின்றனர். ஆனால், பரிசோதனைக்கு பயன்படுத்தும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்துவதும்,

அதில் வரும் குறிப்புகளை அறிந்து கொள்ளவதையும் தெரியாமல் உள்ளனர் என புகார் எழுந்துள்ளது. பரிசோதனைக்கு செல்லும் அலுவலர்கள், அவர்களிடம் உள்ள அட்டவணையில், சராசரியாக அனைவருக்குமே ஒரே டிகிரி வெப்பநிலை உள்ளதாக காட்டுகிறது. இதுபோன்ற பரிசோதனையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, சுகாதார துறை அதிகாரிகள், கருவியை எப்படி பயன்படுத்த வேண்டும். என்னென்ன குறியீடுகள் காட்டுகிறது என்பது பற்றி எவ்வித பயிற்சியும் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், வீடு வீடாக சென்று செய்யப்படும் பரிசோதனை வெறும் கண்துடைப்பாகவே உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கொரோனா பரிசோதனையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, மீண்டும் முறையான பயிற்சி அளித்து, அவர்கள் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: