ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முடிவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முடிவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதி இருப்பதால், நினைவு இல்லமாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டுமென தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு அனுப்பியிருந்தார்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் இதே கோரிக்கையுடன் கடந்த மாதம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொடரும்படி அறிவுறுத்தியதாகவும், ஆனால் அந்த முறையும் அவசர சட்டத்தை எதிர்த்து வழ்க்கு தொடரவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான நகலுடன் முறையான மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: