வேலூர் மாங்காய் மண்டி அருகே காய்கறி மார்க்கெட்டில் விதிமீறி வியாபாரம்: போலீசாருடன் வாக்குவாதம்

வேலூர்: வேலூர் மாங்காய் மண்டி அருகே காய்கறி மார்க்கெட்டில் விதிமீறி வியாபாரம் செய்ததை தடுத்த போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாததில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகரப்பகுதியில் அதிகளவில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நேதாஜி மார்க்கெட் மொத்த விலை காய்கறி மார்க்கெட்டை மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் அமைக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதற்காக தனித்தனியாக தகர கொட்டகைகள் மூலம் 80 கடைகள் அமைக்கப்பட்டன.

இந்த கடைகள் கடந்த 29ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன. கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே. இந்நிலையில், நேற்று காலை அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சமூக இடைவெளியில்லாமல் சுமார் 7 மணி வரை வியாபாரம் செய்து வந்தனர். தகவலறிந்த வடக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கடைகளை மூடச்ெசால்லி வலியுறுத்தினர். இதனால் வியாபாரிகளுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வியாபாரிகள் 200 கடைகளுக்கு பதிலாக 150 கடைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மற்றவர்கள் எல்லாம் எங்கு வியாபாரம் செய்வார்கள்? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த போலீசார், கலெக்டர் தான் அனுமதி அளித்துள்ளார். அவரின் உத்தரவின்பேரில் செயல்படுத்தப்படுகிறது. எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக்கூறினர். இதையடுத்து நீண்ட நேரத்துக்கு பிறகு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: