சாத்தான்குளம் வியாபாரிகள் பலியான விவகாரத்தில் திடீர் திருப்பம் கொலை வழக்கில் எஸ்.ஐ. கைது

* சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடி

* மேலும் ஒரு எஸ்.ஐ, 2 ஏட்டுகள் தலைமறைவு

* தேடுதல் வேட்டை தீவிரம்

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில், திடீர் திருப்பமாக சிபிசிஐடி போலீசார் நேற்று அதிரடியாக வழக்குப்பதிவு செய்து, எஸ்.ஐ., ரகு கணேஷை கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவான எஸ்.ஐ பாலகிருஷ்ணன் மற்றும் 2 போலீசாரை சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொரோனா ஊரடங்கு நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததற்காக கடந்த 19ம் தேதி சாத்தான்குளம் எஸ்ஐ ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட பென்னிக்ஸ் கடந்த 22ம் தேதி இரவும், ஜெயராஜ் 23ம் தேதி அதிகாலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் இருவரையும் சாத்தான்குளம் போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக புகார் எழுந்தது. போலீசாரை கண்டித்து சாத்தான்குளம் வியாபாரிகள் கடையடைப்பு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சாத்தான்குளம் போலீசார் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் மாஜிஸ்திரேட் விசாரணையின் போது போலீசார் ஒத்துழைக்காமல் இருந்ததும், ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் மிரட்டும் தொனியில் செயல்பட்டது குறித்தும், போலீஸ்காரர் மகாராஜன் அவதூறு பேசியது குறித்தும் மதுரை ஐகோர்ட் கிளையில் மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து  போலீஸ்காரர் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகிய இருவரும் மாற்றப்பட்டு புதிய ஏடிஎஸ்பியாக கோபி, சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும் மாஜிஸ்திரேட் விசாரணையின்போது போலீசார் லத்தியால் இரவு முழுவதும் வியாபாரிகள் இருவரையும் தாக்கியது தெரியவந்தது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ரத்தக்கறை, லத்தி உள்ளிட்ட ஆவணங்களை மாஜிஸ்திரேட் சேகரித்தார். இதுகுறித்து பெண் போலீஸ் ஏட்டு ரேவதி சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆதாரங்கள் மாஜிஸ்திரேட் விசாரணையில் சிக்கியது. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர், சிபிஐ இந்த வழக்கை ஏற்கும் வரை இடைக்காலமாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இது தொடர்பான ஆவணங்களை நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் ‘176’ சிஆர்பிசி பிரிவின் கீழ் இரு எப்ஐஆர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த சென்னையில் இருந்து சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் நேற்று தூத்துக்குடி வந்தனர். அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவர்கள் சிபிசிஐடி போலீசாருடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணைக்காக சாத்தான்குளம் சென்றனர். அங்கு காவல் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தினர். தொடர்ந்து ஜெயராஜ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி செல்வராணி மற்றும் உறவினர்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினர். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கடைகள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். பின்னர் சிபிசிஐடி ஐஜி சங்கர் கூறுகையில், சாத்தான்குளம் இரட்டை மரணம் குறித்த வழக்கில் சிபிசிஐடி தரப்பில் 10 முதல் 12 குழுக்கள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை நேர்மையான முறையில் நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும். பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆரில் மாற்றம் செய்யப்படும். எவ்வாறு மாற்றுவது என்பது தொடர்பாக இரவுக்குள் தெரியும் என்றார்.

வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் தாக்கியதற்கான முக்கிய தடயங்களும், லத்தியும் ஆவணமாக கிடைத்துள்ள நிலையில், பெண் போலீசின் சாட்சியம், கோவில்பட்டி அரசு மருத்துவரின் காயங்கள் குறித்த பதிவு, உடற்கூறு அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இந்திய தண்டனைச் சட்டம் 302, 342, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து எஸ்.ஐ.,ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். ஏட்டு ரேவதி கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், ஏட்டுகள் முருகன், முத்துராஜ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தற்போதுவரை 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு மேலும் பலரை சேர்ப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்யவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்றுதான் பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தினர். ஆனால் அரசு, போலீசார் அவர்களை அடிக்கவில்லை என்று மறுத்து வந்தனர்.

இந்தநிலையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, எஸ்.ஐ., கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ஐஜி சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘விரைவான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 12 குழுக்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தின் வழியாக இருப்பதால் எங்களுடைய விசாரணை 4 நாட்களில் முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்றார்.

* 2 ஏட்டுகளை தப்பவிட்ட எஸ்.பி. இன்ஸ்பெக்டர்

சாத்தான்குளம் விவகாரத்தில் தொடர்புடைய ஏட்டுகள் முருகன், முத்துராஜ் ஆகியோரை விசாரணைக்கு எஸ்.பி., அலுவலகம் வரும்படி தூத்துக்குடி எஸ்பியின் தனி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அழைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று திடீரென்று சிபிசிஐடி அதிகாரிகள் தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தியது, அந்த மாவட்ட போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 2 எஸ்.ஐ., 2 ஏட்டுகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த தகவலும் பாலமுருகனுக்கு கிடைத்தது. இதனால் அவர்கள் இருவரையும் தப்பிச் செல்லும்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கூறியுள்ளார். இதனால், அவர்கள் இருவரும் எஸ்பி அலுவலகத்தில் இருந்து தப்பிச் சென்றனர். கையில் கிடைத்த 2 பேரையும் போலீசார் கோட்டை விட்டனர். இதனால் தலைமறைவாக உள்ள எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், ஏட்டுகள் முருகன், முத்துராஜ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

* சாத்தான்குளம் இரட்டை மரணம் குறித்த வழக்கில் சிபிசிஐடி தரப்பில் 10 முதல் 12 குழுக்கள் அமைத்து பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.

* வழக்கு நீதிமன்றத்தின் வழியாக இருப்பதால் சிபிசிஐடி விசாரணை 4 நாட்களில் முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

* சிபிசிஐடி கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நேற்று முன்தினம் துவங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக சிபிசிஐடி விசாரணை தொடர்ந்தது. இதனால் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் யாரும் நுழையாத படி தடுப்பு அமைக்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் சிபிசிஐடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

* ஏடிஜிபி விசாரணை

சாத்தான்குளம் பகுதி முழுவதும் சிபிசிஐடி போலீசார் தடயங்களை சேகரித்து வரும் நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் ஆகியோர் ஜெயராஜ் வீடு, செல்போன் கடை பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று அங்கும் ஆய்வு நடத்தினர்.

* பெண் டாக்டரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சிறையில் அடைக்க மருத்துவ சான்று வழங்கிய சாத்தான்குளம் அரசு மருத்துவமனை டாக்டர் வினிலா, நேற்று திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் நீதிபதி பாரதிதாசன் முன் ஆஜரானார். அவரிடம் காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 3.30 மணி வரை நீடித்தது. இதேபோல் சாத்தான்குளம் காவல்நிலைய எழுத்தர் பியூலாவிடம் மாலை 3.40 மணிக்கு நீதிபதி பாரதிதாசன் விசாரணையை தொடங்கினார். அப்போது அவர், பல்வேறு தகவல்களை கூறியதாக தெரிகிறது. இதையொட்டி விருந்தினர் மாளிகை முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: