சேலம் சின்னக்கடை வீதியில் 19 பேருக்கு கொரோனா உறுதி: கடைகளை அடைத்து சீல் வைத்த மாநகராட்சியின் முடிவுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு!!!

சேலம்: சேலம் சின்னக்கடை வீதியில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடைகளை அடைத்து சீல் வைக்க சென்ற மாநகராட்சி அதிகாரிகளை எதிர்த்து, வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றானது அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா அதிகளவு பரவி வரும் பகுதிகளாக சுமார் 17 இடங்கள் தடை செய்யப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலத்தின் பிரதான வர்த்தக தலமாக விளங்கக்கூடிய சின்னக்கடை வீதியில் 1000க்கும் மேற்பட்ட கடைகள் தற்போது இயங்கி வருகின்றன. இதனால், இப்பகுதியில் 1000கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். கூட்டம் அதிகமான காரணத்தினால் கூலித்தொழிலாளி 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சின்னக்கடைவீதி சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

இதனால், தொடர்ந்து, கொரோனா தொற்று பரவி வருவதால் மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் அப்பகுதிகளை சீல் வைக்க வந்தனர். அப்போது, அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வியாபாரிகள் கூறியதாவது, இங்கு பல்வேறு மக்கள் வசித்து வருகின்றனர்.  இதனால், அவர்களுக்கு பல்வேறு தேவைகள் உள்ளன. மேலும், இங்கு பல்வேறு பழக்கடைகள் இயங்கி வருகிறது. இதனால், வியாபாரம் செய்ய வியாபாரிகள் பழங்களை அதிகளவு வாங்கிவைத்துள்ளனர். இந்நிலையில் திடீரென கடைகளை மூடுவதால் பழங்கள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமே நாங்கள் வியாபாரம் செய்ய முடியும்.

 இல்லையெனில் அனைத்தும் வீணாகி நாங்கள் பெருநஷ்டம் அடைவோம் என்று அப்பகுதி கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், கடைகள் அகற்றப்படுமா? இல்லை சீல் வைக்கப்படுமா? என முடிவெடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: