காஷ்மீரின் சோப்பூரில் தீவிரவாதிகள் அட்டூழியம் : சி.ஆர்.பி.எப் வீரர் வீரமரணம்; 3 வீரர்கள் படுகாயம்; பொதுமக்கள் ஒருவர் உயிரிழப்பு; 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோப்பூர் பகுதியில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்பூர் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்களின் ரோந்து வாகனத்தில் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில், 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் நின்று கொண்டிருந்த கார் மீதும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காரில் இருந்த ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இருப்பினும் காருக்குள் இருந்த 3 வயது சிறுவனை குண்டடிபடாமல் அங்கிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் காப்பாற்றினர். சி.ஆர்.பி.எப். வீரர்கள் பதில் தாக்குதலை முன்னெடுத்த போது, தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் சி.ஆர்.பி.எப் வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு, அங்கு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related Stories: