பா.ஜனதா மீது ராகுல் விமர்சனம் சொல்வது ‘மேக் இன் இந்தியா’ வாங்குவது மட்டும் சீனாவிடமா?

புதுடெல்லி: ‘வாய்பேச்சில் மட்டும் தான் ‘மேக் இன் இந்தியா’ என்பது; மற்றபடி வாங்குவதெல்லாம் சீனாவிடமிருந்துதான்’ என மத்திய பாஜ அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். லடாக் விவகாரத்தை தொடர்ந்து பாஜ, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் வீடியோ பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

உண்மைகள் பொய் சொல்வதில்லை. பாஜ ‘மேக் இன் இந்தியா’ன்னு சொல்கிறது. ஆனால் சீனாவிடமிருந்து வாங்குகிறது. (இத்துடன் ராகுல் பதிவிட்ட ஒரு வரைப்பட புள்ளிவிவரத்தில் கடந்த ஐமு கூட்டணி ஆட்சியை காட்டிலும் பாஜ கூட்டணி அரசு அதிகளவு சீனப் பொருட்களை இறக்குமதி செய்தது காட்டப்பட்டுள்ளது).

இந்தியாவின் நிலத்தை சீனா பறித்திருப்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும். லடாக்கில் 4 இடங்களில் சீனா ஊடுருவியுள்ளது. பிரதமர் மோடி, சீன ராணுவத்தை எப்போது இந்திய எல்லையிலிருந்து விரட்டப் போகிறீர்கள்? எப்படி விரட்டப் போகிறீர்கள்? என்பதை இந்த தேசத்திற்கு சொல்லுங்கள். கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது. இது முழு நாட்டிற்கும் தெரியும். நாங்கள் அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கினோம். முதலில் 6 மாதத்திற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ, ஏழைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.7,500 வழங்கும் வருவாய் உத்தரவாத திட்டத்தை அமல்படுத்தக் கூறினோம். இது தேவையை உருவாக்க வழிவகுக்கும். பொருளாதார மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும். ஆனால் அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை.

3, 4 முறை வலியுறுத்தியும் அரசு ஏற்கவில்லை. பணமில்லை என்ற ஒரே பதிலைதான் தந்தார்கள். ஆனால், 15 பணக்கார நட்பு முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடி வரிக் கடன்களை அரசு தள்ளுபடி செய்துள்ளது, 22 முறை பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியிருக்கிறது. எனவே இங்கு பணப்பற்றாக்குறை இல்லை. நியாய் திட்டத்தை செயல்படுத்தி, ஏழைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்த தேவையான ரூ.3 லட்சம் கோடி பணத்தை அரசு கைவசம் வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: