பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் வக்கீல்கள் போராட்டம்: மாட்டுவண்டியில் உயர் நீதிமன்றம் வந்தனர்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் மாட்டு வண்டியில் உயர் நீதிமன்றம் வரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாலும், ஊரடங்கு காரணமாக எரிபொருள் தேவை கடுமையாக சரிந்ததாலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி இருந்தது. ஆனால் ஜூன் 7ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி உயர்த்தி வருகின்றன. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாட்டு வண்டியில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் என்.அருள் பத்தைய்யா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஆர்.சுதா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருள் பத்தையா, பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Stories: