சிபிஐ விசாரணைக்கு தாமதமாகலாம் சாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு தாமதமாகலாம் என்பதால், சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல்துறையினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரிக்கவும், மாவட்ட அமர்வு நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை ஐகோர்ட் கிளை தீவிரமாக கண்காணிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் உறுதியளித்த ஐகோர்ட் கிளை, பிரேத பரிசோதனை அறிக்கை, மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

விசாரணை அதிகாரியான மாஜிஸ்திரேட்டிடம் முறையற்ற வகையில் நடந்து கொண்டதால் தூத்துக்குடி கூடுதல் எஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் மீது ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இவர்கள் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபினபு, எஸ்பி அருண்பாலகோபாலன், கூடுதல் எஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு வக்கீல் ஆனந்தராஜ் ஆஜராகி, ‘‘மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 24 பேர் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. நடந்த சம்பவத்திற்கு அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகின்றனர்’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘விசாரணைக்கு வந்தவர் ஒரு நீதிபதி. ஐகோர்ட் உத்தரவிட்டு தான் அவர் விசாரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஏன் சாத்தான்குளம் போலீசாருக்கு மட்டும் தெரியவில்லை’’ எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் நீதிபதிகள், ‘‘சிபிஐ விசாரணைக்கு மாற்றியது அரசின் விருப்பம். தற்போதுள்ள கொரோனா சூழலில், ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெற்று சிபிஐ அதிகாரிகள் எப்போது வந்து விசாரிப்பர் என்பது தெரியவில்லை. இவர்களின் விசாரணைக்கு தாமதம் ஏற்படலாம். அதுவரை தடயங்கள் மற்றும் ஆவண, ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அனைத்தும் அழிக்கப்படும் நிலை ஏற்படும். நீதிமன்றத்தை நம்பி, நீதி கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். தடயங்களையும், ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆவண, ஆதாரங்களை பாதுகாத்திடும் வகையில் முறையான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. நெல்லை சரக டிஐஜி தலைமையிலா அல்லது சிபிசிஐடி விசாரணையா என்பது குறித்து அரசு முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும். அதுவரை விசாரணையை ஒத்திவைக்கிறோம்’’ என நீதிபதிகள் கூறினர்.

பின்னர் பகல் 12 மணிக்கு மீண்டும் விசாரணையை துவக்கினர். அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபினபு தலைமையில் விசாரணை நடத்த அரசு தயாராக உள்ளது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘டிஐஜி 3 மாவட்டங்களை நிர்வகிக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் அவரால் முறையாக விசாரிக்க முடியாது. எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுகிறோம்’’ என்றனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரும் மாஜிஸ்திரேட்டின் அறிக்கை தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும். சிபிஐ விசாரணையை துவக்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்படலாம். ஒட்டுமொத்த காவல்துறையினரும் மோசமானவர்கள் அல்ல. ஒரு சிலரால் தான் இதுபோன்ற பிம்பம் ஏற்படுகிறது.

முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கை அடிப்படையில் காயங்கள் இருப்பது தெரிய வருகிறது. இதனை கருத்தில் கொண்டே இந்திய தண்டனை சட்டம் 302ன்படி கொலை வழக்கு பதிவு செய்யலாம்.

பெண் காவலர் ரேவதி, மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்தபோது ஒருவித பயத்துடன் இருந்துள்ளார். சாட்சியத்தில் கூறிய உண்மை வெளியில் தெரிந்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என அச்சமடைந்துள்ளார். எனவே, அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தூத்துக்குடி கலெக்டர் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். தேவைப்பட்டால் ரேவதிக்கு விடுப்பு கொடுக்கலாம். இந்த வழக்கை நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரிக்க வேண்டும். டிஜிபியின் முறையான உத்தரவுக்காக அவர் காத்திருக்க வேண்டியதில்லை. ஐகோர்ட் உத்தரவு அடிப்படையில் உடனடியாக விசாரணையை துவக்க வேண்டும். இந்த விசாரணையை ஐகோர்ட் கண்காணிக்கும். இவரின் விசாரணையே சரியான பாதையில் செல்வதாக அரசு நினைத்தால் சிபிசிஐடி விசாரணையை தொடரலாம்’’ என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (ஜூலை 2) தள்ளி வைத்தனர்.

* ஆவணங்களை ஒப்படைத்தார் டிஐஜி சிபிசிஐடி விசாரணை துவங்கியது

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நெல்லை சரக டிஐஜியிடம் இருந்து சிபிசிஐடி டிஎஸ்பி பெற்றுக் கொண்டு விசாரணையை துவக்கினார். மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை தொடர்ந்து நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் நேற்று மாலை நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவை சந்தித்தார். அப்போது, சாத்தான்குளம் போலீசார் பதிவு செய்த எப்ஐஆர், சிறையில் அடைக்கப்பட்ட ஆவணங்கள், பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை டிஐஜி ஒப்படைத்தார்.

உடனடியாக விசாரணையை துவக்கிய சிபிசிஐடி டிஎஸ்.பி அனில்குமார் வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரிப்பதற்காக நேற்றிரவு தனது குழுவினருடன் தூத்துக்குடிக்கு சென்றார். அங்கு அவரிடம் கோவில்பட்டி டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் சிறை துறை அதிகாரிகள், தங்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தனர். தந்தை, மகன் சாவு வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் துவங்கியுள்ளதால், வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து சிபிசிஐடி டிஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வருகின்றனர். அவர்கள் அங்கிருந்து சாத்தான்குளம், கோவில்பட்டி சென்று விசாரணை நடத்துகின்றனர்.

* பெண் காவலருக்கு கமல் பாராட்டு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘’சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* சிபிஐ அதிகாரிகள் எப்போது வந்து விசாரிப்பார்கள் என்பது தெரியவில்லை.

* அதற்குள் தடயங்கள் மற்றும் ஆவண, ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும்.

* எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுகிறோம்.

Related Stories: