அருப்புக்கோட்டை அருகே சுக்கில்நத்தம் கிராமத்தில் இடியும் நிலையில் விஏஓ அலுவலகம், ரேஷன் கடை கட்டிடம்: சீரமைக்க கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சுக்கில்நத்தம் ஊராட்சியில் இடியும் நிலையிலுள்ள விஏஓ, ரேஷன் கடை கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சுக்கில்நத்தம் ஊராட்சி. இதில் சுக்கில்நத்தம், அம்பேத்கர் காலனி, இந்திராநகர் ஆகிய பகுதிகள் உள்ளன. 700க்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர். இந்த பகுதி மக்கள் இங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர். ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ளது. புதிய கட்டிடம் கட்டித்தர கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதனால் ரேஷன் கடை அருகில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று கிராம நிர்வாக அலுவலக கட்டிடமும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.  இதனால் விஏஓ அலுவலகம் தற்காலிகமாக  நூலக கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ரேஷன் கடை, விஏஒ அலுவலகமும் முக்கியமான ஒன்று. இங்கு மக்கள் அடிக்கடி வந்து செல்வர். பேருந்து நிறுத்தத்தில் இந்த இரு கட்டிடங்களும் இருப்பதால் மழை, வெயிலுக்கு பொதுமக்கள் ஒதுங்கும்போது இடிந்து உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழைய கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: