கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்: அரசு யோகா மற்றும் மருத்துவ துறை தலைவர் தீபா விளக்கம்!!!

சென்னை:  கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்க அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறை தலைவர் டாக்டர் தீபா விளக்கமளித்துள்ளார். கொரோனா வைரசு முதன்முதலில் சீனாவில் தொடந்து தற்போது, உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் பொருளாதாரரீதியான பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் குறிப்பாக கொரோனா தொற்று தற்போது அதிகளவில் பரவி வருகிறது. மேலும், இந்த வைரசுக்கு பல மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், வசதியில் உள்ள மக்களும் வறுமையில் வாடும் மக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு உடல்ரீதியான பிரச்சனைகளையும் தாண்டி மனரீதியான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் மன உளைச்சலை குறைக்க அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறை தலைவர் டாக்டர் தீபா பல்வேறு யுத்திகளை மக்களுக்கு அளித்துள்ளார். அதாவது, இந்த நேரங்களில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சில எளிமையான யோகா பயிற்சிகளை செய்வது நல்லது. இதற்கு மிகவும் முக்கியமானது மூச்சு பயிற்சியாகும். பிராமரி பிரணாயாமம். பிரணாயாமம் (Breathe under control) என்றால் நமது சுவாசத்தை கட்டுக்குள் வைத்திருப்பது என்று அர்த்தம்.

மன அழுத்தத்தை போக்க எளிய வழி:

மன அழுத்தம் அதிகமாகினால் சுவாசம் நமது கட்டுக்குள் இருக்காது. மேலோட்டமாக மூச்சு இருக்கும். சில பேருக்கு வேகமாக மூச்சு இழுக்கும். இந்த மாதிரியான நேரங்களில் சுவாசத்தில் கவனம் செலுத்தி அதை நமது கட்டுக்குள் கொண்டு வரும் போது நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். பிராமரி பிரணாயாமம் என்பது humming bee சப்தம் கொண்டது. பிராமரி என்றாலே ஹம்மிங் பீ- அதாவது தேனீக்கள் ரீங்காரத்தை எழுப்புவது போல் செய்ய வேண்டும். இதனால் மன அழுத்தம் நீங்கி மூளையானது புத்துணர்ச்சி பெரும்.

இதனைத்தொடர்ந்து, நைட்ரேட் பிரணாயாமத்தை நாம் செய்யும் போது நமது மூளையில் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது. மூளையில் அதிர்வு ஏற்படும் போது நமது மனஅழுத்தம் மிகவும் எளிமையாக குறைகிறது. நமது மூக்கு பகுதியில் பாராசைனஸ் என்ற கேவிட்டி இருக்கும். அதில் நைட்ரிக் ஆக்ஸைடு இருக்கும். நாம் சுவாசிக்கும்போது அந்த ஆக்ஸிஜன் நைட்ரிக் ஆக்ஸைடுடன் சேர்ந்து நைட்ரேட்டாக மாறுகிறது.

நைட்ரேட்: கவலைகளை மறந்து ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும்:

இந்த நைட்ரேட்டானது நமது ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்தப்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் கிருமிகளுக்கு எதிராக கிருமிநாசினியாக செயல்படுவதற்கும் பயன்படுகிறது. இதோடு நமது ரத்த அழுத்தத்தின் அளவையும் சர்க்கரையின் அளவையும் கொழுப்புகளின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும், ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

இது எல்லாமே நமது மனதை அமைதிப்படுத்துதல் மூலமாக நடக்கிறது. அதாவது நாம் பதற்றப்படும் போது நம் உடலில் சிம்பதட்டிக் என்ற நரம்பு மண்டலம் அதிக செயல்பாட்டில் இருக்கும். இந்த பிரணாயாமம் நாம் செய்யும் போது அது பாராசிம்பதட்டிக் சிமுலேஷனை கொடுத்து நம் மனதை சாந்தப்படுத்துகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இந்த பிராமரி பிரணாயாமத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா இருப்பவர்கள் தினமும் காலை 5 முறையும் மாலை 5 முறையும் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். 5 முதல் 10 முறை கூட இதை செய்யலாம். மேற்கண்ட நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவதுடன் மற்ற நோய்களின் சீற்றத்தையும் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றார் டாக்டர் தீபா.

Related Stories: